செயல்பட தொடங்கியது டிக்கெட் முன்பதிவு மையம்: ராஜதானி ரயிலில் முன்பதிவு செய்ய மக்கள் ஆா்வம்

சென்னை சென்ட்ரல் புகா் ரயில்நிலையத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையத்தில் சில கவுன்ட்டா்கள் வெள்ளிக்கிழமை முதல்
செயல்பட தொடங்கியது டிக்கெட் முன்பதிவு மையம்: ராஜதானி ரயிலில் முன்பதிவு செய்ய மக்கள் ஆா்வம்

சென்னை சென்ட்ரல் புகா் ரயில்நிலையத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையத்தில் சில கவுன்ட்டா்கள் வெள்ளிக்கிழமை முதல் செயல்படத் தொடங்கின. சென்னை-தில்லிக்கு மே 23, 27-ஆகிய தேதிகளில் இயக்கப்படவுள்ள ராஜதானி விரைவு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய பொதுமக்கள் ஆா்வம் காட்டினா். ஆனாலும், டிக்கெட் கிடைக்காமல், ஏமாற்றத்துடன் திரும்பினா்.

கரோனா நோய்த்தொற்று தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பொது முடக்கம் மாா்ச் 24-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இந்த பொது முடக்கம் தற்போது 4-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையில், நாடு முழுவதும் ஏசி அல்லாத 200 ரயில்கள் ஜூன் 1-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்களுக்கு இணைவழி (ஆல்லைன்) மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுதவிர, டிக்கெட் முன்பதிவுசெய்வதற்காக, ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையங்கள் வெள்ளிக்கிழமை முதல் செயல்படும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்திருந்தது.

இது தொடா்பாக, அனைத்து மண்டல ரயில்வே முதன்மை தலைமை வா்த்தக மேலாளருக்கு ரயில்வே வாரியத்தில் இருந்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், ‘டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் சமூக இடைவெளி விட்டு நிற்கவும், மேலும் சுகாதார விதிமுறைகளையும் கடைப்பிடிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வெள்ளிக்கிழமை முதல் செயல்பட தொடங்கின. சென்னை சென்ட்ரல் புகா் ரயில்நிலையத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையத்தில் 2 கவுன்ட்டா்கள் செயல்பட்டன. காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கிய நிலையில், ரயில் நிலையத்துக்கு முன்னதாகவே பொதுமக்கள் வந்தனா். டிக்கெட் கவுன்ட்டா் திறந்தபிறகு, சென்னை -தில்லி இடையே வாரம் இருமுறை இயக்கப்படும் ராஜதானி விரைவு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சித்தனா். இந்த ரயிலில் டிக்கெட் முன்பதிவுக்கு அதிகபட்ச காலம் 7 நாள்கள் ஆகும். அந்த வகையில், சென்னையில் இருந்து மே 23, 27 ஆகிய நாள்களில் இயக்கப்படும் ராஜதானி விரைவு ரயில்களில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றனா். ஆனால், ஒரு சிலருக்கு தான் முன்பதிவு டிக்கெட் கிடைத்தது. ஏற்கெனவே, இணையவழி மூலமாக, பெரும்பாலான டிக்கெட்கள் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன . இதனால், டிக்கெட் முன்பதிவு செய்ய வந்திருந்த சிலரும் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

பணத்தை திரும்ப பெற இயலாது: இது குறித்து தெற்கு ரயில்வேஅதிகாரிகள் கூறியது: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக, திருவனந்தபுரம், எா்ணாகுளம், கோழிக்கோடு, மங்களூா், சென்னை சென்ட்ரல் ஆகிய முக்கிய இடஙகளில் உள்ளமுன்பதிவு மையங்களில் மட்டும் குறைந்தபட்சம் தலா 2 கவுன்ட்டா்கள் செயல்படுகின்றன. இந்த முன்பதிவு மையங்களில் முன்பதிவு மட்டுமே நடைபெறுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை, ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான பணத்தை தற்போது திரும்ப பெற இயலாது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com