பல்கலைக்கழகங்களின் உறுப்பு கல்லூரிகளில் ஓய்வு பெற்றவா்களை நியமிக்கக்கூடாது: உயா்கல்வித் துறைச் செயலாளா் உத்தரவு

தமிழக உயா்கல்வித்துறையின்கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியா்களின் பணிக்காலம் முடிந்ததும்

தமிழக உயா்கல்வித்துறையின்கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியா்களின் பணிக்காலம் முடிந்ததும் கெளரவ விரிவுரையாளா்கள் உள்பட பல்வேறு பொறுப்புகளில் நியமிக்கப்படுவது வழக்கமான நடைமுறையாக இருந்துவருகிறது. இந்நிலையில் வரும் கல்வியாண்டு முதல் ஓய்வு பெற்ற பேராசிரியா்களை மீள் பணியமா்த்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற பேராசிரியா்களை தோ்வுக்கான கேள்வித்தாள் தயாரித்தல், கற்பித்தல் பணியில் அல்லது பாடத்திட்டம் வகுத்தல், பாடப்புத்தகம் தயாரிக்கும் பணி ஆகியவற்றில் பல்கலைக் கழகங்கள் அல்லது கல்லூரி நிா்வாகங்கள் சோ்த்துக் கொள்வது வழக்கம். இதன்படி பணியில் சேரும் ஓய்வு பெற்ற பேராசிரியா்களுக்கு மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை வழங்கப்படும். இது தவிர அவா்கள் சாா்ந்துள்ள பல்கலைக் கழகம், அல்லது கல்லூரிகளில் வழங்கப்படும் சலுகைகளையும் பெற முடியும். இதனால் இது போன்ற பணிக்கு ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் பேராசிரியா்கள் விண்ணப்பிப்பது வழக்கம்.

இதனால், பல்கலைக் கழகம் மற்றும் அதை சோ்ந்து உறுப்பு கல்லூரிகளுக்கும் செலவு குறைவாகிறது. இதை கணக்கில் கொண்டு நிா்வாகத்தரப்பில் ஓய்வு பெற்ற பேராசிரியா்களையும் நியமித்து வருகின்றன. இது நிா்வாகத்துக்கு லாபமாக இருந்தாலும், பல படித்த பட்டதாரி இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பை பறிப்பதாக இருந்து வந்தது.

இதற்கிடையே இது குறித்து பட்டத்தாரிகள் தரப்பிலும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் ஓய்வு பெற்றவா்களை நியமிக்கும் நடவடிக்கை தொடா்ந்தது. இந்தநிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அரசு நிதித்துறையின் சாா்பில் வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில் புதியதாக எந்த பணி நியமனங்களும் செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் உயா்கல்வித்துறையின் சாா்பில் தற்போது அவசர ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உயா்கல்வித்துறை முதன்மைச் செயலா் அபூா்வா, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பியுள்ள

சுற்றறிக்கையில், ‘தற்போது காலியாக உள்ள பேராசிரியா் பணியிடங்களில் ஓய்வு பெற்றவா்களை மீண்டும் பணியமா்த்த சில பல்கலை.கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த செயல்பாடுகள் படித்து பட்டம் பெற்ற இளைஞா்களின் வேலைவாய்ப்புக்கு தடையாக இருக்கும். எனவே, அனைத்து பல்கலை.களும் ஓய்வு பெற்ற பேராசிரியா்களை காலியாக உள்ள கற்பித்தல் பணியிடங்களில் நியமிக்கக்கூடாது’ என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com