விடுதலைப்புலிகள் முகாம் அமைக்க உதவ முன்வந்த சிங்கம்பட்டி ஜமீன்தார்!

தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்காகப் பயிற்சி பயிற்சி முகாம்கள் அமைக்க முயன்ற காலத்தில் இடம் தந்து உதவ முன்வந்தவர் மறைந்த சிங்கம்பட்டி ஜமீன்தார்.
விடுதலைப்புலிகள் முகாம் அமைக்க  உதவ முன்வந்த சிங்கம்பட்டி ஜமீன்தார்!

தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்காகப் பயிற்சி பயிற்சி முகாம்கள் அமைக்க முயன்ற காலத்தில் இடம் தந்து உதவ முன்வந்தவர் மறைந்த சிங்கம்பட்டி ஜமீன்தார்.

நெல்லை மாவட்டம்  சிங்கம்பட்டி ஜமீன்தார் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார்.  ஜமீன்தாரி முறை ஒழிப்புக்கு பின்னர் இந்தியாவில் முடிசூட்டி பட்டம் கட்டிய மன்னர்களில் கடைசி மன்னர் இவர்தான்.

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் படித்த காலத்தில் இருந்து இவருடன் அறிமுகம். கடந்த 1972-ல் நடந்த மாணவர் போராட்டத்தில், பேரணியைக் காவல்துறையினர் தாக்கும்போது, பி.காம். மாணவர் சேலம் லூர்துநாதன், வண்ணாரப்பேட்டை சுலோசனா முதலியார் பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். அந்த சம்பவம் நடந்த நாள் மாலை அவரை சந்திக்கும்போது அதுகுறித்து மிகுந்த கவலையோடு அவர் விசாரித்தபோதுதான் முதல் நெருக்கமான அறிமுகம். 

அதன் பின் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு பகுதிகளுக்குச் செல்லும்போது அவர் ஊரில் இருந்தால் அவரைச் சந்திப்பது வாடிக்கை.

கடந்த 1983-ல் ஈழப் பிரச்னை கடுமையாக இருந்தபோது, இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில் விடுதலைப்புலிகளுக்குப் பயிற்சி முகாம் அமைத்துக் கொடுக்கவும் அதற்கான உதவிகளைச் செய்யவும் மத்திய அரசு செயலில் இறங்கியது. 

இவருடைய சிங்கம்பட்டி எஸ்டேட்டுக்கு உள்பட்ட பாபநாசம் மலைப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்குப் பயிற்சி முகாம் நடத்த நல்ல இடம் என்று பழ. நெடுமாறனுடைய பரிந்துரையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பேபி சுப்ரமணியம் ஆகியோருடன் நானும் சென்று இவரைப் பார்த்தபோது, அந்த இடம் பயிற்சிக்கு ஏற்ற இடமாக இல்லை.

இடத்தைப் பார்த்துவிட்டு வந்தபோது, அவர் வீட்டுக்கு அழைத்து உபசரித்து அனுப்பியது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.  ஸ்ரீவில்லிபுத்தூர் தானிப்பாறை அருவி அருகில் மற்றுமொரு பயிற்சி இடம் பார்க்கலாம் என்று முடிவெடுத்தோம். எங்களிடம் இருந்தது ஒரே வாகனம்தான். 

எங்களோடு இந்திய முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் அம்பாசமுத்திரத்தில் வந்து சேர்ந்தார்கள். அவர்களை அழைத்துச் செல்ல வாகனம் வேண்டும். நாங்கள் வாகனம் வாடகைக்கு எடுக்கலாம் என்று ரகசியமாகப் பேசிக்கொண்டிருந்ததை அவர் கேட்டுவிட்டு என்ன உங்களுக்கு தயக்கம் என்னுடைய காரை எடுத்துக்கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக மதுரை வரை செல்லுங்கள் என்று கம்பீரமான குரலில் சொன்னது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது. இப்படியான தொடர்புகள் அவரோடு நீடித்தன. 

2004-ல் “நிமிர வைக்கும் நெல்லை” என்று ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் வரலாற்றையும் சிறப்புகளையும் தொகுத்து என்னுடைய நூல் வெளியானது. அந்த நூலைப் படித்துவிட்டு, “நம் மண்ணிற்கு சிறப்புசெய்து விட்டீர்கள், சபாஷ் தம்பி” என்றார். அதுமட்டுமல்ல சிங்கம்பட்டி ஜமீனைக் குறித்தும் சிறப்பான பதிவு செய்துள்ளீர்கள் என்றார். 

நல்ல மனிதர். பண்பாளர். கம்பீரமானவர். அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com