காவல்துறையை முடக்கும் கரோனா

சென்னையில் காவல்துறையை முடக்கும் வகையில் வேகமாக பரவும் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிப்பதற்கும்,அதில்
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: சென்னையில் காவல்துறையை முடக்கும் வகையில் வேகமாக பரவும் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிப்பதற்கும்,அதில் இருந்து காவலர்களை விரைந்து மீட்டெடுக்கும் வகையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றை தடுக்கும் வகையில் தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ஆம் தேதி பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டபோது, காவல்துறையினரின் பணிச்சுமை மேலும் அதிகரித்தது. அதோடு,கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டதால்,அந்தப் பகுதிகளில் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிகிறார்களா, தனிநபர் இடைவெளியைப் பின்பற்றுக்கிறார்களா என்பதையும் கண்காணித்து,நடவடிக்கை எடுக்கின்றனர். இதில் கோயம்பேடு மார்க்கெட், ராயபுரம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட சிலப் பகுதிகளில் கரோனா வேகமாக பரவுவது தெரிந்தும், எவ்வித தடுமாற்றமும் இன்றி காவல்துறையினர் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

250-ஐ நெருங்குகிறது: இதன் காரணமாக சென்னையில் கடந்த 3 வாரங்களாக கரோனாவால் பாதிக்கப்படும் காவலர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது,.  கரோனா சாதாரண காவலரில் தொடங்கி ஐ.ஜி. அளவிலான அதிகாரிகள் வரை சமத்துவத்துடன் வேகமாக பரவத் தொடங்கியது.

இன்றைய நிலைமைக்கு சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையினரின் எண்ணிக்கை 250-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் கரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்படும் காவல்துறைகளாக இருக்கும் மகாராஷ்டிரம், தில்லி மாநில காவல்துறைகளுக்கு அடுத்தப்படியாக தமிழகம் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கரோனா தடுப்புப் பணியின்போது,அந்த நோயால் பாதிக்கப்பட்ட காவலர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதலும், அரவணைப்பும் தேவை என்பதை உணர்ந்த காவல்துறை அதிகாரிகள் உணர்ந்தனர்.

சிறப்புக் குழு: இதையடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் உத்தரவின்பேரில் கிழக்கு மண்டல இணை ஆணையர் ஆர்.சுதாகர் தலைமையில் கரோனாவால் பாதிக்கப்பபடும் காவலர்களுக்கு தேவையான வசதியும், ஆதரவும் வழங்கும் வகையில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இக் குழுவில் மயிலாப்பூர் துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய், கோட்டூர்புரம் உதவி ஆணையர் கே.என்.சுதர்சன், 5 காவல் ஆய்வாளர்கள் உள்பட 25 பேர் உள்ளனர்.

இதில் காவல் ஆய்வாளர்களுக்கு மண்டல வாரியாகவும், பெருநகர காவல்துறையின் பிற துறைகள் ரீதியாகவும் பிரித்து பணிகள் வழங்கப்பட்டுள்ளன. கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்கள் எந்நேரமும் தொடர்புக் கொள்ளும் வகையில், இந்த குழுவில் உள்ள அதிகாரிகளின் செல்லிடப்பேசி எண்கள், காவல்துறை கட்டுப்பாட்டு அறை மற்றும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

குழு செயல்பாடு ஒரு காவலருக்கு கரோனா பாதிப்பு இருப்பது மாநகராட்சி மூலம் தெரியவந்ததும், இக் குழு அந்த காவலரை தொடர்பு கொள்கிறது. அப்போது அந்த காவலருக்கு தேவையான வசதிகளை மருத்துவமனையில் செய்து கொடுக்கிறது. கரோனா நோயத்தொற்றால் பாதிக்கப்பட்ட காவலர் குடும்பத்தினர் எச் சூழ்நிலையிலும் பதற்றமடையாமல் இருக்கும் வகையில்,அவர்களை அரவணைத்து ஆறுதல் கூறுகிறது. மேலும் காவலர் குடும்பத்தை, இக் குழு தங்களது தொடர்பிலே வைத்துக் கொண்டு,அவர்களுக்கு தேவையான விஷயங்களை அறிந்து செயல்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com