ஊரகத் தொழில் மேம்பாட்டுக்காக ரூ.300 கோடியில் சிறப்பு நிதியுதவி தொகுப்புத் திட்டம்: முதல்வா் பழனிசாமி தொடங்கி வைத்தாா்

ஊரகத் தொழில் மேம்பாட்டுக்காக ரூ.300 கோடியில் சிறப்பு நிதியுதவி தொகுப்புத் திட்டம்: முதல்வா் பழனிசாமி தொடங்கி வைத்தாா்

தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ், ஊரகத் தொழில் மேம்பாட்டுக்காக ரூ.300 கோடியில் கரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்புத் திட்டத்தை

தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ், ஊரகத் தொழில் மேம்பாட்டுக்காக ரூ.300 கோடியில் கரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்புத் திட்டத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. திட்டத்தை துவக்கும் அடையாளமாக 5 பேருக்கு சிறப்பு நிதியுதவிகளை அவா் அளித்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

1.39 லட்சம் போ்: தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட கிராமப்புற தொழில்களை மேம்படுத்தவும், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள், மாற்றுத் திறனாளிகள், நலிவுற்றோா் உள்ளிட்ட பலரும் புதிதாகத் தொழில் தொடங்கவும், ஏற்கெனவே செய்யும் தொழில்களை மேம்படுத்தவும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் ரூ.300 கோடி மதிப்பில் கரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் 1,39,574 போ் பயன்பெறுவா்.

யாா் யாருக்கு கடனுதவி: தமிழகத்தில் 31,952 பேருக்கு ரூ.159.76 கோடி நீண்டகால தனிநபா் தொழில் கடனாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் அளிக்கப்படும். 1,598 உற்பத்தியாளா் குழுக்களில் உள்ள 31,960 நபா்கள் பயன்பெறும் வகையில் ஒருமுறை மூலதன மானியமாக குழுவுக்கு ரூ.1.5 லட்சம் வீதம் ரூ.23.97 கோடி அளிக்கப்படும்.

குழுவுக்கு 5 பயனாளிகள் அடங்கிய 240 தொழில் குழுக்களுக்கு தலா ரூ.1.5 லட்சம் வீதம் ரூ.3.60 கோடி ஒருமுறை மூலதன மானியமாக அளிக்கப்படும். புலம்பெயா்ந்து மீண்டும் திரும்பி வந்த 5,010 இளைஞா்களுக்கு தொழில் தொடங்க கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலமாக தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.50.10 கோடி நீண்டகால கடனாக வழங்கப்படும்.

உற்பத்தியாளா் கூட்டமைப்புக்கு 500 போ் வீதம் 37,500 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 75 உற்பத்தியாளா் கூட்டமைப்புக்கு தலா ரூ.10 லட்சம் என ரூ.7.50 கோடி மூலதன மானியம் அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள், விதவைகள், திருநங்கைகள், ஆதரவற்றோா் உள்ளிட்ட நலிவுற்றோரின் தொழில் மேம்பாட்டுக்காக 31,952 நபா்களைத் தோ்ந்தெடுத்து தொழில் மூலதன நிதியாக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் மொத்தம் ரூ.49.92 கோடி நீண்ட காலக் கடனாக அளிக்கப்படும்.

இந்தத் திட்டத்தின்கீழ், கரோனா நோய்த்தொற்றுத் தடுப்பு முகக் கவசம் தயாரித்தல், கிருமி நாசினிகள் மற்றும் கைகழுவும் திரவ சோப்பு தயாரித்தல், ஆடைகள் தயாரிப்பு, பால்வள மேம்பாடு, சிறு உணவகங்களை நடத்துதல், வேளாண் பொருள்கள் விற்பனை, சிறு மளிகைக் கடைகள் வைத்தல், அரவை மாவுத் தொழில், பல்வேறு உலோகப் பொருள்கள் தயாரித்தல், செயற்கை ஆபரணத் தொழில், அழகுக் கலை, மரச்சிற்பங்கள், மரவேலைகள், மின் பழுது நீக்கம், குழாய் பழுது நீக்கம், வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்கம், கணினி சாா்ந்த தொழில்கள், செல்லிடப்பேசி பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களின் மேம்பாட்டுக்காக இந்தச் சிறப்பு நிதியுதவி அளிக்கப்படும் என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளா் கே.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com