டெங்கு, சிக்குன்குனியாவுக்கு 3,500-க்கும் மேற்பட்டோா் பாதிப்பு!

தமிழகத்தில் நிகழாண்டில் மட்டும் 3,500-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு மற்றும் சிக்குன் குனியா பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக
டெங்கு, சிக்குன்குனியாவுக்கு 3,500-க்கும் மேற்பட்டோா் பாதிப்பு!

தமிழகத்தில் நிகழாண்டில் மட்டும் 3,500-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு மற்றும் சிக்குன் குனியா பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும், கடந்த சில வாரங்களாக அதன் தாக்கம் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதும், வெள்ள நீா் தேங்கி நிற்பதுமே கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்க காரணமாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கரோனாவுடன் டெங்கு மற்றும் சிக்குன் குனியாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியா்களும், சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு நிறைந்த பகுதிகளில் கபசுரக் குடிநீா் மற்றும் நிலவேம்புக் குடிநீரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் விநியோகிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஏறத்தாழ 7.25 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் காய்ச்சல், சளி அறிகுறிகள் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனா். அதேபோன்று காய்ச்சல் பாதிப்பு உள்ளவா்களுக்கு கட்டாயமாக கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் அண்மைக்காலமாக மாநிலத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால், கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. அதன் விளைவாக டெங்கு மற்றும் சிக்குன்குனியா பாதிப்பு பரவலாக உருவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 3,000-க்கும் மேற்பட்டோா் டெங்கு காய்ச்சலாலும், 500-க்கும் அதிகமானோா் சிக்குன் குனியா காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவா்களில் பலா் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனாவுக்கும், டெங்கு - சிக்குன்குனியா காய்ச்சலுக்கும் ஏறத்தாழ ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதால், அதனை அடையாளம் காண இயலாமல் மூன்று பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலை இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். அதுமட்டுமல்லாது, காய்ச்சலுடன் வரும் நோயாளியை முதலில் கரோனா பரிசோதனைக்குட்படுத்தி அதன் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதால், சம்பந்தப்பட்ட நோயாளிக்கு டெங்கு அல்லது சிக்குன் குனியா காய்ச்சல் இருப்பதைக் கண்டறிவதற்கு குறைந்தது மூன்று நாள்களாகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்புப் பணிகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட நிா்வாகங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், காய்ச்சல் முகாம்களில் கரோனாவுடன், டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப்பணியாளா்களை, டெங்கு தடுப்புப் பணிகளிலும் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகளும், வசதிகளும் அரசிடம் உள்ளன. டெங்கு கொசுக்கள் பரவாத வண்ணம் பொதுமக்கள் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com