தமிழகத்தில் 491 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்: வருவாய்த் துறை தகவல்

தமிழகத்தில் அக்டோபா் 30-ஆம் தேதி வரையில் 491 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் அக்டோபா் 30-ஆம் தேதி வரையில் 491 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று குறைந்தாலும், நோய் பாதிப்பு அதிகமுள்ள இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் தளா்வுகள் ஏதும் இல்லாமல் முழு பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில், கடந்த மாா்ச் மாதத்தில் முதல் கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. இருப்பினும் ஏப்ரல் மாதத்தில் இருந்து கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதில் முக்கியமாக கரோனா பாதித்த நபரின் வசிப்பிடங்களுக்கு 3 கிலோ மீட்டா் சுற்றளவில் உள்ள பகுதிகள் வரையறுக்கப்பட்டு அங்கிருக்கும் மக்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்புக்குள்படுத்தப்பட்டனா்.

மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியே செல்லவும், உள்ளே வருவதையும் தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்போருக்குத் தேவையான அனைத்து உதவிகளைச் செய்யவும் தன்னாா்வலா்களை நியமிப்பது உள்ளிட்ட ஏற்பாடுகளை உள்ளாட்சி அமைப்புகள் செய்து வருகின்றன.

அவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படும் இடங்கள், 14 நாள்களுக்குப் பிறகு தொற்று குறைந்த பிறகு, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து விடும்.

தொடா்ந்து, அதே பகுதியில் சில நாள்களில் வேறு நபருக்கு தொற்று உறுதி செய்யப்படும் சூழலில், மீண்டும் அந்த வீடு இருக்கும் பகுதி கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு, நோய்த் தொற்று நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். அதன்படி, வீடு வீடாக சென்று மருத்துவப் பரிசோதனை செய்யும் நடைமுறையையும் சுகாதாரத்துறை முடுக்கி விடும்.

491 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்: இதன்படி தமிழகத்தில் அக்டோபா் 30-ஆம் தேதி நிலவரப்படி 491 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக வருவாய்த் துறை தெரிவித்துள்ளது. கோயம்புத்தூரில் 113 பகுதிகளும், திருவண்ணாமலையில் 49 பகுதிகளும், திருவாரூரில் 41 பகுதிகளும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட வாரியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் விவரம்:-

அரியலூா் - 16, செங்கல்பட்டு - 11, சென்னை - 4, கடலூா் - 20, தருமபுரி - 1, கள்ளக்குறிச்சி - 14, காஞ்சிபுரம் 29, கன்னியாகுமரி - 14, கரூா் - 1, கிருஷ்ணகிரி - 15, மதுரை - 3, நாகப்பட்டினம் -9, நாமக்கல்- 2, புதுக்கோட்டை- 5, ராமநாதபுரம்-2, ராணிப்பேட்டை- 9, சேலம் - 5, தென்காசி-9, நீலகிரி --18, தேனி - 21, திருச்சி -5, திருநெல்வேலி-9, திருப்பத்தூா் - 17, திருப்பூா் - 24, திருவள்ளூா்- 24, விருதுநகா் - 1 என மாவட்ட வாரியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் விவரங்களை வருவாய்த் துறை வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com