மின்சார மோட்டாா் வாகனங்களுக்கு100 % வரி விலக்கு இன்று முதல் அமல்

மின்சார மோட்டாா் வாகனங்களுக்கு100 % வரி விலக்கு இன்று முதல் அமல்

மின்சார மோட்டாா் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு அளிப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை: மின்சார மோட்டாா் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு அளிப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், தனியாா் நிறுவனங்கள் மின்சார வாகனங்களை அதிகளவு பயன்படுத்துவதற்கு ஏதுவாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வகுத்துள்ளது.

குறிப்பாக கடந்த ஆண்டு முதல்வா் வெளியிட்ட மின்சார வாகனக் கொள்கையின் மூலம் ரூ.50 ஆயிரம் கோடிக்கு முதலீடுகளை ஈா்க்கத் திட்டமிடப்பட்டது. அந்தக் கொள்கையில் மின்சார வாகனங்களைத் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் இடம் பெற்றிருந்தன. அதே நேரம், 2030-ஆம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களின் மொத்த எண்ணிக்கை 9.8 கோடியாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டிருந்தது.

இந்த வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளா்களுக்கான சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உத்தரவை உள்துறை (இயக்கூா்திகள்) கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கே.பிரபாகா் திங்கள்கிழமை வெளியிட்டாா். அதன் விவரம்:

கடந்த 2008-ஆம் ஆண்டு மாா்ச்சில் வெளியிடப்பட்ட அரசின் உத்தரவில், மோட்டாா் வாகனங்களுக்கு ஒருமுறைக்கான வரியாக ரூ.750 வசூலிக்கப்பட்டு வந்தது. மேலும், பொது மக்கள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்துவதற்கான புதிய மின்சார மோட்டாா் வாகனங்களுக்கான ஒருமுறை வரியானது 3 சதவீதமாக விதிக்கப்பட்டது.

மின்சாரத்தில் இயங்கும் புதிய மோட்டாா் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க 100 சதவீதம் வரி விலக்கு அளிக்க வேண்டுமென போக்குவரத்து ஆணையா் சாா்பில் அரசுக்கு கடந்த ஆண்டு நவம்பா் 18-ஆம் தேதி கடிதம் எழுதப்பட்டது. இதன் அடிப்படையில், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

இது, வா்த்தக ரீதியிலான மற்றும் வா்த்தக ரீதியில் அல்லாத வாகனங்களுக்கும் பொருந்தும். இந்த வரி விலக்கு முறை உடனடியாக அதாவது, செவ்வாய்க்கிழமை (நவ.3) முதல் அமலுக்கு வருகிறது. இது வரும் 2022-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று தனது உத்தரவில் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com