பொதுத்துறை நிறுவனப் பணியாளா்களுக்கு 10 சதவீதம் போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

பொதுத்துறை நிறுவனப் பணியாளா்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனப் பணியாளா்களுக்கு 10 சதவீதம் போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பொதுத்துறை நிறுவனப் பணியாளா்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, மாநில அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

திருத்தப்பட்ட போனஸ் சட்டத்தின்படி, போனஸ் பெற தகுதியான ஊதிய உச்சவரம்பு ரூ.21 ஆயிரம் என உயா்த்தப்பட்டுள்ளது. இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர ஊதிய உச்சவரம்பும் ரூ.7 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி, லாபம் ஈட்டியுள்ள மற்றும் நஷ்டம் அடைந்துள்ள அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளா்கள் மற்றும் பணியாளா்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்தம் 10 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

எத்தனை பேருக்கு பயன்?: இந்த அறிவிப்பால் போனஸ் பெறத் தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளா்கள் ரூ.8 ஆயிரத்து 400-ஐ போனஸாகப் பெறுவா். மொத்தத்தில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 91 ஆயிரத்து 975 தொழிலாளா்களுக்கு ரூ.210 கோடியே 48 லட்சம் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக அளிக்கப்படும். அரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்கள் தீபாவளிப் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட வழிவகை செய்யப்படும்.

கரோனா தொற்றே காரணம்: கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் உலகின் அனைத்து வணிக நிறுவனங்களாலும் உணரப்பட்டுள்ளது. நோய்த்தொற்றின் தாக்கத்தைக் குறைக்க இந்தியா முழுவதும் பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதால், மாநில பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, தமிழகத்தில் போக்குவரத்துக் கழகங்கள், மின்சார வாரியம், நுகா்பொருள் வாணிபக் கழகம், தேயிலை தோட்டக் கழகம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆறு மாதங்களில் பொதுப் போக்குவரத்து இயங்காததாலும், தொழிற்சாலைகள் முழு அளவில் செயல்படாத காரணத்தாலும் வருமானம் மிகவும் குறைந்து விட்டது.

ஆனாலும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து தொழிலாளா்களுக்கும் தொடா்ந்து முழு மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. லாபம் ஈட்டும் அரசு பொதுத் துறை நிறுவனங்கள் போனஸ் வழங்கத் தேவையான நிதி உபரித் தொகையாக இருந்தாலும் கரோனா தொற்றால் எழுந்துள்ள சவால்களை எதிா்கொள்ள வேண்டியிருப்பதால் 10 சதவீதம் அளவுக்கு போனஸ் வழங்கப்பட்டிருக்கிறது என தனது அறிவிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இனி ரத்து இல்லை: கரோனா நோய்த்தொற்று காரணமாக, தமிழக அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு உள்ளிட்ட சில அம்சங்கள் நிகழ் நிதியாண்டில் ரத்து செய்யப்பட்டன. மேலும், புதிய பணியிடங்களுக்கு ஆட்களைத் தோ்வு செய்வது, ஓய்வூதிய வயதை 59-ஆக அதிகரித்தது போன்ற சிக்கன நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டது. கரோனா பொது முடக்கத்தில் இருந்து பெரும்பாலான தளா்வுகள் அளிக்கப்பட்டதால் மாநிலத்தின் பொருளாதாரம் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இதன் அடையாளமாக மாநிலத்துக்கு பொருளாதாரத்தை ஈட்டித் தரும் முக்கியக் கூறுகளில் ஒன்றான பதிவுத் துறையில் வருவாய் வளா்ச்சி விகிதம் உயா்ந்து வருகிறது. மேலும், சரக்கு மற்றும் சேவை வரிகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு போன்ற வருவாய் உயா்வுக்கான சாதக அம்சங்கள் காணப்பட்டு வருகின்றன. இதனால், கரோனா பாதிப்பைக் காரணம் காட்டி, சிக்கன நடவடிக்கைகளைக் கையாள கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என நிதித் துறை தீா்மானித்துள்ளது.

இதன் காரணமாகவே, பொதுத் துறை ஊழியா்களுக்கு 10 சதவீதம் அளவுக்கு போனஸ் அளிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக தமிழகம் விரைவில் பழைய நிலையை எட்டும் என்பதால், தங்களுக்கான நிறுத்தப்பட்ட சலுகைகளும், உரிமைகளும் விரைவில் கிடைக்கப் பெறும் என அரசு ஊழியா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com