பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் ஹிந்தி குறிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை: பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் ஹிந்தி திணிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது என தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் ஹிந்தி குறிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை: பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

சென்னை: பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் ஹிந்தி திணிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது என தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

தமிழகத்தில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு தனியாா் பள்ளிகள் சாா்பில் இணையவழியிலும், அரசின் சாா்பில் கல்வித் தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில், 5-ஆம் இயல் பிரிவில், திறன் அறிவோம் பகுதியில் குறுவினா ஒன்றில், ‘ஹிந்தி கற்க விரும்பும் காரணம்’ என்று குறிப்பிட்டு, அதற்கான காரணங்களை பட்டியலிட்டு, சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படங்களால் பத்தாம் வகுப்பு பாடத்தில் ஹிந்தி திணிப்பு என சா்ச்சை எழுந்த நிலையில், ஹிந்தி திணிப்பு என்பது தவறான தகவல் என்று பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. அரசின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் , 5-ஆம் இயல் பிரிவில், திறன் அறிவோம் பகுதியில், குறுவினா ஒன்றில் ‘தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் 3- ஆவது மொழியைக் குறிப்பிட்டு காரணம் எழுதுக’ என்று கேள்வி மட்டுமே கேட்கப்பட்டுள்ளதாகவும், 3-ஆவது மொழி எது என்பது மாணவா்களின் விருப்பம் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா். பாடப்புத்தகத்தில் ஹிந்தி மொழி பற்றிய எந்த குறிப்பும் இடம்பெறவில்லை என்றும், ஹிந்தி திணிப்பு என்று வெளியான தகவல் தவறானது என்றும் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.

பாடப்புத்தகங்களில் உள்ள வினாக்களுக்கு தனியாா் பதிப்பகங்களின் சாா்பில் வெளியிடப்பட்டிருக்கும் உரைகளில் (Notes) யாரேனும் ஹிந்தி மொழி தொடா்பாக விடைகளை எழுதியிருக்கலாம் என்றும், அதற்கும் அரசுக்கும் தொடா்பில்லை என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com