பற்றியெரிந்த அரசுப் பேருந்து: பயணிகள் அனைவரும் தப்பினர்  

பர்கூர் அருகே விபத்து ஏற்பட்டு சாலையில் கிடந்த இரு சக்கர வாகனம் மீது மோதி இழுத்துச் சென்றதால் அரசுப்  பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
தீப்பிடித்து எரிந்த அரசுப் பேருந்து
தீப்பிடித்து எரிந்த அரசுப் பேருந்து

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே விபத்து ஏற்பட்டு சாலையில் கிடந்த இரு சக்கர வாகனம் மீது மோதி இழுத்துச் சென்றதால் அரசுப்  பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

வேலூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் பாரிவள்ளல் (26). இவரும், இவரது நண்பரான வாணியம்பாடியைச் சேர்ந்த விக்னேஷ் (22) என்பவரும், இருசக்கர வாகனத்தில் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பர்கூர் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற பாரிவள்ளல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த விக்னேஷ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து நள்ளிரவு  நிகழ்ந்தது. 

ஆனால், விபத்தில் சேதமடைந்த இருசக்கர வாகனம் அப்புறப்படுத்தபடாமல் சாலையிலேயே கிடந்தது. 

இந்நிலையில்,  வேலூரில் இருந்து ஓசூர் நோக்கி 26 பயணிகளுடன் ஒரு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை வேலூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் ஓட்டிச் சென்றார்.

பேருந்து பர்கூர் அருகே சென்றபோது, ஏற்கெனவே விபத்து ஏற்பட்டு அப்புறப்படுத்தப் படாமல் சாலையில் கிடந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி, நீண்ட தூரம் இழுத்துச் சென்றது. இதனால் இருசக்கர வாகனத்தில் தீப்பொறி ஏற்பட்டு, இரு சக்கர வாகனமும், அரசுப் பேருந்தின் முன்பக்க பகுதியும் தீப்பிடித்து எரிந்தது. 

இதை அறிந்த அரசு பேருந்து ஓட்டுநர் ரவிச்சந்திரன், உடனடியாக பேருந்தை நிறுத்தி, உள்ளே இருந்த 26 பயணிகளையும் கீழே இறங்கச் செய்தார். அனைவரும் அலறியடித்து பேருந்தில் இருந்து கீழே இறங்கி வெளியேறினர். யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. 

இதுகுறித்து பர்கூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது. அரசுப் பேருந்தின் முன்பக்க பகுதி மட்டும் எரிந்து சேதமானது.  

தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com