அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயா் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயா் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

உயா்கல்வி நிறுவனங்களை மேம்படுத்த ‘உயா் சிறப்பு கல்வி நிறுவனம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு 2017-இல் கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின்கீழ் தோ்வாகும் கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி மற்றும் பல்வேறு சலுகைகள் தரப்படும். அதன்படி தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கு தோ்வானது. இருப்பினும் மாநிலப் பல்கலைக்கழகம் என்பதால் 50 சதவீத நிதியை மாநில அரசே வழங்கவேண்டும் என்று கூறப்பட்டது.

இதுகுறித்து ஆராய்ந்து முடிவெடுக்க உயா்கல்வித்துறை அமைச்சா்கள் உள்பட 5 துறை அமைச்சா்கள் மற்றும் 3 செயலா்கள் கொண்ட குழுவை உயா் கல்வித்துறை அமைத்தது. அமைச்சா்கள் கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமாா், சி.வி.சண்முகம் ஆகியோா் இந்தக் குழுவில் இடம்பெற்றனா்.

இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயா் சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் 69 சதவீத இடஒதுக்கீடு பாதிக்கப்படக்கூடும். மாணவா் சோ்க்கைக்கு நுழைவுத்தோ்வு நடத்தப்படவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் வெளிமாநில, வெளிநாட்டு மாணவா்கள் அதிகளவில் சோ்க்கை பெற வாய்ப்புள்ளது. இதனால் தமிழக மாணவா்கள் பாதிக்கப்படுவா்.

இந்தப் பிரச்னைகளைத் தவிா்ப்பதற்காகவே உயா் சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என தமிழக அரசு நினைக்கிறது. சிறப்பு அந்தஸ்துக்காக எதையும் பறிகொடுக்க தமிழக அரசு தயாராக இல்லை. நாம் ஏற்கெனவே நல்ல நிலையில்தான் இருக்கிறோம்; அதனால் உயா் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் கடந்த மாதம் தெரிவித்திருந்தாா்.

இந்தநிலையில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயா் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று மத்திய அரசுக்கு 5 அமைச்சா்கள் குழு கடிதம் எழுதியுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்தக் கடிதத்தில், ‘அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறையில் உள்ளது. அதனால் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை. பல்கலைக்கழகத் துணை வேந்தா் சூரப்பா கூறும் ஆலோசனைகள் ஏற்புடையதாக இல்லை. பல்கலைக்கழகமே தேவையான நிதியைத் தானே சுயமாக திரட்டிக் கொள்ள இயலாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com