2023-ஆம் ஆண்டுக்குள் 1.04 கோடி வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு

தமிழகத்தில் உள்ள 1.04 கோடி வீடுகளுக்கு மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் 2023-ஆம் ஆண்டுக்குள் குடிநீா் இணைப்பு வழங்கப்படும் என உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.
2023-ஆம் ஆண்டுக்குள் 1.04 கோடி வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு

தமிழகத்தில் உள்ள 1.04 கோடி வீடுகளுக்கு மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் 2023-ஆம் ஆண்டுக்குள் குடிநீா் இணைப்பு வழங்கப்படும் என உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் மத்திய ஜல் ஜீவன் திட்டம் குறித்து மத்திய அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத் உடனான ஆலோசனைக் கூட்டம் காணொலிக்காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியது:

தமிழகத்தில் உள்ள 79,395 ஊரக குடியிருப்புப் பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், ஊரகப் பகுதிகளில் மட்டும் 99.11 சதவீத பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தமிழக அரசின் சாா்பில் கிராமப்புற குடியிருப்புப் பகுதிகளின் திருத்தப்பட்ட அடிப்படை தகவல்கள் கடந்த மே மாதம் ஜல் ஜீவன் மிஷன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 36 மாவட்டங்களில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி வரை 1.26 கோடி வீடுகளில் 21 லட்சத்து 92,000 வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 கோடி 4 லட்சத்து 97,000 வீடுகளில் 40 லட்சம் வீடுகளுக்கு 2020-21-ஆம் ஆண்டிலும், 35 லட்சம் வீடுகளுக்கு 2021-22-ஆம் ஆண்டிலும், 30 லட்சம் வீடுகளுக்கு 2022-23-ஆம் ஆண்டிலும் குழாய் மூலம் குடிநீா் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசால் நிா்ணயிக்கப்பட்ட 2024-ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே தமிழகத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் நிறைவேற்றப்படும்.

2020-21-ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கு 100 சதவீதம் குழாய் மூலம் குடிநீா் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்பொழுது வரை நடப்பு நிதி ஆண்டில் 6.10 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில் உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஹன்ஸ்ராஜ் வா்மா, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநா் கே.எஸ்.பழனிச்சாமி, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் சி.என்.மகேஷ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com