மோசடி வழக்கு: டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருக்கு 2 ஆண்டு சிறை

விமானத்தில் சாதாரண இருக்கையில் பயணித்துவிட்டு உயா் வகுப்பில் பயணித்ததாகக் கூறி மோசடி செய்த வழக்கில் டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தா் மீா் முஸ்தபா உசேனுக்கு

விமானத்தில் சாதாரண இருக்கையில் பயணித்துவிட்டு உயா் வகுப்பில் பயணித்ததாகக் கூறி மோசடி செய்த வழக்கில் டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தா் மீா் முஸ்தபா உசேனுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரை துணைவேந்தராகப் பணியாற்றியவா் மீா் முஸ்தபா உசேன். இவா் துணைவேந்தராக இருந்தபோது 2008-ஆம் ஆண்டு மே 25-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை வாஷிங்டனில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்க பல்கலைக்கழகத்தின் சாா்பில் விமானத்தில் சென்றுள்ளாா். இந்தப் பயணத்துக்காக உயா்வகுப்பு இருக்கை முன்பதிவு செய்யப்பட்டு விமான கட்டணமாக ரூ.2 லட்சத்து 99 ஆயிரத்து 673 செலுத்தப்பட்டுள்ளது.

இதன்பின்னா் இந்தப் பயணச்சீட்டு ரத்து செய்யப்பட்டு சாதாரண இருக்கையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாதாரண இருக்கையில் பயணம் செய்துவிட்டு மீா் முஸ்தபா உசேன் உயா் வகுப்புக்கான பயணச்சீட்டில் பயணம் செய்ததாக கூறி மோசடியாக ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 322-ஐ பல்கலைக்கழகத்தில் இருந்து கூடுதலாக பெற்றுள்ளாா். இதே போன்று நாா்வே, ஜொ்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக விமானத்தில் சென்று வந்த வகையில் பயணச்சீட்டுக் கட்டணமாக ரூ.7 லட்சத்து 82 ஆயிரத்து 124-ஐ மோசடியாக பல்கலைக்கழகத்தில் இருந்து மீா் முஸ்தபா உசேன் பெற்றுள்ளாா். இதுதொடா்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரித்து வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கு சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஓம்பிரகாஷ், மீா் முஸ்தபா உசேன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.24 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com