பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் அசத்தல்: இலவச மருத்துவ சேவைகள் 'சுகாதார கொலு' 

சுகாதார நிலையத்தில் வழங்கப்படும் இலவச மருத்துவ சேவைகள் குறித்து, நூதன முறையில் 'சுகாதார கொலு'
பேளூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த சுகாதாரக்கொலு.
பேளூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த சுகாதாரக்கொலு.


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் அரசு மேம்படுத்தப்பட்ட வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்படும் இலவச மருத்துவ சேவைகள் குறித்து, நூதன முறையில் 'சுகாதார கொலு' அமைத்து, மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கு பல்வேறு தரப்பினர் இடையேயும், பாராட்டுகளும் வரவேற்பும் கிடைத்தது.

பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகள் உள்பட அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும், புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, குடும்பநல அறுவை சிகிச்சை பிரிவு, தடுப்பூசி பணிகள், நடமாடும் மருத்துவக் குழுவின் பணிகள், பள்ளி நலக்கல்வி குழுவின் பணிகள், மருத்துவமனையில் வழங்கப்படும் சேவைகள், கரோனா விழிப்புணர்வு, டெங்கு விழிப்புணர்வு, பல்  மற்றும் இயன்முறை மருத்துவம், சித்த மருத்துவம், காசநோய் மற்றும் எய்ட்ஸ் ஆகியவை உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

பேளூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த சுகாதாரக்கொலு.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  வழங்கப்பட்டு வரும் இலவச மருத்துவ சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையில், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் இணைந்து நூதன முறையில் 'சுகாதாரக்கொலு'  அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தனர்.

இதனையடுத்து, பேளூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமையில், வளாகம் முழுவதும், செவ்வாய்க்கிழமை வண்ணக்கோலங்கள், பொம்மைகள்,  வண்ணப்படங்கள் மற்றும் விழிப்புணர்வு பதாகைகள் அமைத்தனர்.  மருத்துவ சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த 'சுகாதாரக் கொலு' கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இலவச மருத்துவ சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த வண்ணக் கோலங்கள்.

நூதன சுகாதாரக் கொலு மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுக்கான ஏற்பாடுகளை, அரசு மருத்துவர்கள் திவ்யபாரதி, பேரின்பம், வினோத், ராகுல் சியாம்சங்கர் ,பிரபாகரன் கார்த்திகா ஆகியோர் செய்திருந்தனர்.

பேளூர் வட்டார சமுதாய சுகாதார செவிலியர் ராணி தலைமையில்,  வட்டாரத்தின் அனைத்து கிராம சுகாதார செவிலியர்கள், மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்று, வண்ணக் கோலங்கள் தீட்டி, ஆரோக்கிய உணவு சமைத்தும், விழிப்புணர்வு கண்காட்சி,  சுகாதாரக் கொலு பொம்மைகள் மற்றும் பதாகைகள் ஆகியவற்றையும் அழகுற அமைத்திருந்தனர்.

சுகாதார நிலையத்தில் வழங்கப்படும் இலவச மருத்துவ சேவைகள் குறித்து, நூதன முறையில் 'சுகாதார கொலு'

மருத்துவமனைக்கு வருகை தந்த நோயாளிகள்,  பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், நூதன முறையில் அமைக்கப்பட்டிருந்த இந்த சுகாதார கொலுவினை கண்டுகளித்து, மருத்துவர்கள் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்களை பாராட்டினர்.

இந்நிகழ்வில் சிறப்பாக பங்களிப்பு செய்தவர்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ்களும்,  பரிசுகளும் வழங்கப்பட்டன.
விழாவிற்கான  ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள்  செல்வ பாபு மற்றும் செல்வம் ஆகியோர் செய்திருந்தனர்.

நிறைவாக, பேளூர் வட்டார அலுவலக கண்காணிப்பாளர்  பாலசந்தர் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com