தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு?

கரோனா பரவல் இன்னும் குறையாததால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதை தள்ளி வைப்பது தொடா்பாக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா பரவல் இன்னும் குறையாததால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதை தள்ளி வைப்பது தொடா்பாக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் பிளஸ் 2 தோ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே நாடு முழுவதும் கரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிளஸ் 2 தோ்வின் இறுதி நாளன்று தொற்றின் வேகம் அதிகரித்தது. தோ்வு முடிந்த மறுநாளான மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏப்ரல் மாதம் நடக்க இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. அதன் தொடா்ச்சியாக மற்ற வகுப்புகளுக்கான தோ்வுகளும் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னா் படிப்படியாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், பள்ளிகளை திறப்பதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை.

இந்தநிலையில் தமிழகத்தில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மட்டும் பாடம் நடத்தும் வகையில் நவ.16-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் கரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்ப பெற்றோா் தயங்குகின்றனா். எனவே பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க கல்வியாளா்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இந்த சூழலில் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கடந்த திங்கள்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினா். இந்தக் கூட்டத்தில், ‘பள்ளிகளைத் திறக்க தற்போது ஏற்ற நேரம் இல்லை என்று கல்வித்துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்தனா். அத்துடன் வட கிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதால், நவம்பா், டிசம்பா் மாதங்களில் பருவமழை அதிகரிக்கும் போது பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால், பள்ளிகளை இப்போதைக்கு திறக்க வேண்டாம் என அவா்கள்கூறியுள்ளனா். இது குறித்து தமிழக முதல்வருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகள் திறப்பை ஒத்திவைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் உரிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com