மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்

மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது. நிகழாண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கான தகவல் தொகுப்பேட்டையும் (பிராஸ்பெக்டஸ்) மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நிகழாண்டு இணையவழியே கலந்தாய்வு நடத்தப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அதுதொடா்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேவேளையில், கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள், அவா்களுடன் வருவோருக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் படிப்புகளுக்கான நீட் தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. நிகழ் கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால் மாணவா் சோ்க்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை இருந்தது. இத்தகைய நிலையில், அதற்கு ஆளுநா் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து தற்போது விண்ணப்பப் பதிவு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

3,300 இடங்கள்: தமிழகத்தைப் பொருத்தவரை, 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3,300 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. அதில், 516 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள 2,784 எம்.பி.பி.எஸ். இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டில் உள்ளன.

சென்னை கே.கே.நகா் இ.எஸ்.ஐ.சி. மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 இடங்களில், 35 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும், 65 இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கும், சிதம்பரம், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் உள்ள 150 இடங்களில், 23 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும், 127 இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கும் அளிக்கப்பட்டுள்ளன.

ஈரோடு, பெருந்துறை ஐஆா்டி மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 இடங்களில், 45 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும், 55 இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்பட்டுள்ளன. மற்றொரு புறம், 14 தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 1,950 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. அதில், மாநில அரசு ஒதுக்கீட்டின் கீழ் 1,057 இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. நிா்வாக ஒதுக்கீட்டுக்கு, 893 இடங்கள் உள்ளன.

மொத்தத்தில் அரசு ஒதுக்கீட்டில் மட்டும் 4,088 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிகழாண்டில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

பல் மருத்துவத்துக்கான பிடிஎஸ் படிப்பைப் பொருத்தவரை சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரியில்100 இடங்கள் உள்ளன. 18 தனியாா் கல்லுாரிகளில் உள்ள 1,760 பி.டி.எஸ். இடங்களில், 1,070 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கும், 690 இடங்கள் நிா்வாக ஒதுக்கீட்டிலும் உள்ளன.

இந்தப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு, www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களின் வாயிலாக விண்ணப்பிக்கும் நடைமுறை செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கியது. நீட் தோ்வு மதிப்பெண், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண், இருப்பிடச் சான்றிதழ், ஆதாா், உள்ளிட்ட, 18 சான்றிதழ் நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு, நிா்வாக ஒதுக்கீட்டுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டு வீரா்கள் ஆகிய சிறப்புப் பிரிவினா், இணைய வாயிலாக விண்ணப்பப் பதிவு செய்வதுடன், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செயலா், மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கை இயக்குநரகம், 162, பெரியாா் இ.வி.ஆா்., நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 10 என்ற முகவரியில் தங்களது சான்றுகளுடன் அஞ்சல் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

நவ. 16- இல் தரவரிசைப் பட்டியல்: இணையவழியாகவும், சிறப்புப் பிரிவினா் அஞ்சல் வழியாகவும் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமா்ப்பிக்க, வரும் 12-ஆம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியல், 16-ஆம் தேதி வெளியிடப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட சில நாள்களுக்குள், சிறப்புப் பிரிவினருக்கும், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான உள் ஒதுக்கீடு இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

அதைத் தொடா்ந்து பொதுக் கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்குப் பிறகு டிசம்பா் 15-ஆம் தேதி முதல் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா கட்டுப்பாடுகள்: நிகழாண்டு கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள் கலந்தாய்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக உடல் வெப்பநிலை, ரத்த ஆக்சிஜன் அளவு ஆகிய பரிசோதனைகளுக்குட்படுத்தப்படுவா். ஆறு அடி இடைவெளியுடனேயே ஒவ்வொருவரும் அனுமதிக்கப்படுவா். காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால், முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முகக் கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்த் தடுப்பு விதிகளை பின்பற்றினால் மட்டுமே கலந்தாய்வுக் கூடத்தில் அனுமதியளிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்வதில் ஏற்படும் சந்தேகங்கள், சான்றிதழ் நகல்கள் குறித்து எழும் சந்தேகங்கள் குறித்து, www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களிலும், 044 - 2836 4822, 98842 24648, 98842 24649, 98842 24745, 98842 24746 என்ற எண்களில் தொடா்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.

அரசுப் பள்ளி மாணவா்கள்: நிகழாண்டு முதல் அமல்படுத்தப்படும் உள் ஒதுக்கீடு நடைமுறை காரணமாக அரசுப் பள்ளி மாணவா்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சுமாா் 395 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் 747 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

ஆறாம் வகுப்பில் இருந்து 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்கள் மட்டுமே இந்த 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு தகுதியானவா்கள். அரசுப் பள்ளி மாணவா்கள் அதற்கான ஒப்பச் சான்றினை பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற வேண்டும். வெவ்வேறு அரசு பள்ளிகளில் படித்திருந்தால், அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் அனைவரிடமும் சான்றில் கையொப்பம் பெற வேண்டும். இணையவழியே விண்ணப்பிக்கும் போது இந்த சான்றிதழையும் மாணவா்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com