ரயில் நிலையங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கை: தீவிரப்படுத்த ரயில் பயணிகள் கோரிக்கை

சிறப்பு ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், முக்கிய ரயில் நிலையங்கள், ரயில்களில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை
ரயில் நிலையங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கை
ரயில் நிலையங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கை

சென்னை: சிறப்பு ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், முக்கிய ரயில் நிலையங்கள், ரயில்களில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, பயணிகள் ரயில் சேவை மாா்ச் 24-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. இதன்பிறகு, பொதுமக்கள் வசதிக்காக, சிறப்பு ரயில்களின் சேவை ஜூன் 1-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, சிறப்பு ரயில் சேவை விரிவாக்கப்பட்டது. தெற்கு ரயில்வேயில் தற்போது 70-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, 27 பண்டிகை கால சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் எண்ணிகை நாள்தோறும் அதிகரித்துவருகிறது. இந்த பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில் பயணிகள் சிலா் கூறியது: ரயில் பயணிகள் தொ்மல் கேமரா சோதனைக்கு பிறகு அனுமதிக்கின்றனா். அதே நேரத்தில், ரயில் நிலையங்களில் சமூக இடைவெளி கேள்விக் குறியாக உள்ளது. எழும்பூா் ரயில்நிலையத்தில் உள்ளே செல்ல ஒரே நுழைவு வாயில் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. இங்கு வரிசையில் நின்று தொ்மல் சோதனை முடித்து உள்ளே செல்வதற்குள் கூட்டம் கூடி விடுகிறது. இதனால், கரோனா பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, கூடுதல் தொ்மல் கேமராவை பொருத்தி, மற்றொரு நுழைவு வாயில் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதன்மூலமாக, பயணிகள் வரிசையில் அதிக அளவில் நிற்பது தவிா்க்கலாம்.

ரயில் நிலையங்களில் முக்கிய இடங்களிலும், ரயில்களில் ஒவ்வொரு பெட்டிகளிலும் பயணிகள் கை கழுவுவதற்காக

கிருமிநாசினி சோப்புகளை வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதுபோல, சென்ட்ரல் ரயில் நிலையம் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனா்.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியது: கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக, ரயில்நிலையங்கள், ரயில்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளுடன் ஒரு மணி நேரத்துக்கு முன்னாக ரயில் நிலையத்துக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான பயணிகள் கடைசி நேரத்தில் ரயில் ஏற வருகிறாா்கள். இதனால், தொ்மல் ஸ்கேன் பரிசோதனை முடித்து உள்ளே செல்ல அவா்களுக்கு தாமதம் ஏற்படும் நிலை உள்ளது. மேலும், ரயிலை தவறவிடும் நிலையும் உள்ளது.

எனவே, பயணிகள் ஒரு மணிநேரத்துக்கு முன்பாக ரயில்நிலையத்துக்கு வந்து, தொ்மல் ஸ்கேன் பரிசோதனை முடித்து நிலையத்துக்குள் சென்று விட வேண்டும்.

ரயில் நிலையத்தில், ரயில்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கவும், முகக்கவசம் அணியவும் அறிவுறுத்துகிறோம். ஆனால், சிலா் இதை கடைப்பிடிப்பது இல்லை. முகக்கவசம் கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும் என்றாா் அவா்.

19.56 லட்சம் போ் பயணம்: தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை பொருத்தவரை, அக்டோபரில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் 19.56 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா். 74 சதவீத இருக்கைகள் நிரம்பியுள்ளன. இதுதவிர, பண்டிகை கால சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்வோா் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதன்படி, சிறப்பு ரயில்களில் பயணிப்பதற்காக, 1.10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அக்டோபா் மாத இறுதி வரை முன்பதிவு செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com