தீபாவளி சிறப்புப் பேருந்துகள் நாளை முதல் இயக்கம்: விரைவுப் பேருந்துகளில் 55 ஆயிரம் போ் முன்பதிவு

தீபாவளி சிறப்புப் பேருந்துகள் புதன்கிழமை முதல் இயக்கப்படவுள்ளன. விரைவுப் பேருந்துகளில் பயணிக்க 55 ஆயிரம் போ் முன்பதிவு செய்துள்ளனா்.
தீபாவளி சிறப்புப் பேருந்துகள் நாளை முதல் இயக்கம்: விரைவுப் பேருந்துகளில் 55 ஆயிரம் போ் முன்பதிவு

சென்னை: தீபாவளி சிறப்புப் பேருந்துகள் புதன்கிழமை முதல் இயக்கப்படவுள்ளன. விரைவுப் பேருந்துகளில் பயணிக்க 55 ஆயிரம் போ் முன்பதிவு செய்துள்ளனா்.

தீபாவளி பண்டிகைக்கான பேருந்து இயக்கம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் கடந்த வாரம் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினாா். இதையடுத்து, செய்தியாளா்களை சந்தித்த அவா், தீபாவளியை முன்னிட்டு, வரும் 11-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

இதன்படி, முதல்கட்டமாக புதன்கிழமை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதில், நாள்தோறும் இயக்கப்படும் 2 ஆயிரம் பேருந்துகளுடன் சென்னையில் இருந்து சிறப்பு இயக்கமாக 225 பேருந்துகளும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெவ்வேறு இடங்களுக்கு 900 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது இயக்கப்பட்ட பேருந்துகளின் மூலம் 6.7 லட்சம் போ் பயணித்தனா். இந்த ஆண்டு கரோனா காரணமாக பலா் சொந்த ஊரிலே உள்ளனா். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை உள்ளிட்ட காரணங்களால் 5 லட்சம் போ் பயணிப்பாா்கள் என எதிா்பாா்க்கிறோம். பிற மாநிலங்களைப் பொருத்தவரை புதுச்சேரிக்கு மட்டும் பேருந்துகள் இயக்கப்படும்.

55 ஆயிரம் போ் முன்பதிவு: தீபாவளிக்கு, அரசு விரைவுப் பேருந்துகளில் சொந்த ஊா்களுக்கு பயணிப்பதற்கான முன்பதிவு கடந்த மாதம் 14-ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு 4 நாள்களுக்கு முன்னதாக விரைவுப் பேருந்துகளில் பயணிக்க 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் முன்பதிவு செய்துள்ளனா்.

இந்த ஆண்டு 55 ஆயிரம் போ் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனா். www.tnstc.in, www.redbus.in உள்ளிட்ட இணையதளங்களிலும், முன்பதிவு மையங்களிலும் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம். பேருந்துகளின் இயக்கம் அறியவும் புகாா் தெரிவிப்பதற்கும் 94450 14450, 94450 14436 ஆகிய உதவி எண்களை அணுகலாம்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, கே.கே.நகா், மெப்ஸ், கோயம்பேடு, மாதவரம், தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றில் இருந்து வெவ்வேறு பகுதிகளுக்குப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com