முன்னாள் நீதிபதி கர்ணன் வெளியிட்ட விடியோக்களை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை ஆபாசமாக விமர்சித்து முன்னாள் நீதிபதி கர்ணன் வெளியிட்ட விடியோக்களை நீக்க சமூக ஊடக நிறுவனங்களுக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை ஆபாசமாக விமர்சித்து முன்னாள் நீதிபதி கர்ணன் வெளியிட்ட விடியோக்களை நீக்க, யூ டியூப், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்களுக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தா உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும், நீதிமன்ற பணியாளர்களையும் ஆபாசமாக விமர்சித்து சமூக ஊடகங்களில் விடியோ வெளியிட்டார். 

இதுதொடர்பாக அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது விடியோக்களை முடக்க யூ டியூப், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு உத்தரவிடக் கோரியும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் ராஜ்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் நீதித்துறையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பின், முக்கியமான அரசியல் சாசன பதவி வகித்த முன்னாள் நீதிபதி கர்ணன், இதுபோல தொடர்ந்து பேசி வருவதாகக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு  நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.12-க்கும் மேற்பட்ட விடியோக்களை வெளியிட்ட நீதிபதி கர்ணன் மீது புகார் அளித்தும், தமிழக அரசு, காவல் துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டுக்குள் அத்துமீறியது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், முக்கியமான அரசியல் சாசன பதவி வகித்த முன்னாள் நீதிபதி கர்ணன், தரம் தாழ்ந்து உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற இந்நாள் முன்னாள் நீதிபதிகளையும், குடும்பத்தினரையும், பெண் வழக்குரைஞர்களையும், நீதிமன்ற பணியாளர்களையும் ஆபாசமாக விமர்சித்து வருவது, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின்படி தண்டனைக்குரிய குற்றம். எனவே மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கர்ணன் பேச்சுக்கள் அடங்கிய விடியோக்களை சமூக ஊடகங்களில் நீக்க உத்தரவிட்டனர்.

சமூக ஊடகங்களில் யாராவது எதையாவது பேசினால் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழக அரசுக்கு  அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மனு தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், காவல்துறை டிஜிபி, காவல் ஆணையர், சைபர் குற்றப்பிரிவு உதவி ஆணையர், முன்னாள் நீதிபதி கர்ணன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் டிசம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com