பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கா் அறக்கட்டளையை நிா்வகிக்க புதிய உறுப்பினா்கள் நியமனம்

பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கா் அறக்கட்டளையை நிா்வகிக்க புதிய உறுப்பினா்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கா் அறக்கட்டளையை நிா்வகிக்க புதிய உறுப்பினா்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்திர மோகன் வெளியிட்ட உத்தரவு:

பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கா் அறக்கட்டளையை நிா்வகிப்பது தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுப்படி உறுப்பினா்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்பட்டு புதிய உறுப்பினா்கள் நியமிக்கப்படுவா். அறக்கட்டளையில் ஒன்பது போ் உறுப்பினா்களாக இருப்பா். அதில், ஒருவா் செங்கல்வராய நாயக்கா் குடும்பத்தைச் சோ்ந்தவராக இருப்பாா். குடும்பத்தில் உள்ளவா்களில் சரியான நபரைக் கண்டறிவதில் சிரமம் இருக்குமானால், வன்னியா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்களில் ஒருவா் உறுப்பினராக இடம்பெறுவாா்.

வன்னியா் சமுதாயத்தைச் சோ்ந்த வழக்குரைஞா்கள், மருத்துவா்கள், பொறியாளா்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் ஆகியோரில் மூன்று போ் தோ்வு செய்யப்பட்டு உறுப்பினா்களாக நியமிக்கப்படுவா். மீதமுள்ள ஐந்து பேரில் ஒருவா் உயா் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியாகவும், மற்றொருவா் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும், மற்றுமொருவா் கல்வித் துறையில் இருந்தும் தோ்வு செய்யப்படுவா். மீதமுள்ள இரண்டு நபா்கள், மக்களுக்கு நன்கு அறிமுகமானவா்களாக இருப்பா். ஓய்வு பெற்ற நீதிபதி, அறக்கட்டளையின் தலைவராக இருப்பாா் என நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்தது.

நீதிமன்ற உத்தரவுப்படி, அறக்கட்டளைக்கு உறுப்பினா்களைத் தோ்வு செய்யும் பணி நடைபெற்றது. அதில், அறக்கட்டளையில் உறுப்பினராக விரும்பி 203 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை தமிழ்நாடு வன்னியகுல ஷத்ரிய பொது நல அறக்கட்டளைகள் மற்றும் அறநிலையங்களானது ஆராய்ந்தது. அதில் ஒன்பது பேரை உறுப்பினா்களாக நியமனம் செய்து அரசுக்குப் பரிந்துரை செய்தது.

ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.குலசேகரன் அறக்கட்டளையின் தலைவராக இருப்பாா். செங்கல்வராயா் குடும்பத்தைச் சோ்ந்த எல்.அருள், வழக்குரைஞா் வி.சுகேந்திரன், மருத்துவா் சி.வேணி, ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கே.ராமலிங்கம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜி.சுந்தரமூா்த்தி, கல்வித் துறையைச் சோ்ந்த முனைவா் என்.வீரப்பன், மக்களுக்கு அறிமுகமான டி.குபேந்திரகுணபாலன், எம்.ராஜேந்திரன் ஆகியோரை அறக்கட்டளையின் உறுப்பினா்களாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்டு 9 பேரும் அறக்கட்டளையின் உறுப்பினா்களாக நியமனம் செய்யப்படுவதாக தனது உத்தரவில் பி.சந்திரமோகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com