ரூ.24 கோடியில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள்

அவசரகால மருத்துவ சேவைகளுக்காக புதிதாக கொள்முதல் செய்யப்பட்ட 108 எண்ணிக்கையிலான ஆம்புலன்ஸ் வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

சென்னை: அவசரகால மருத்துவ சேவைகளுக்காக புதிதாக கொள்முதல் செய்யப்பட்ட 108 எண்ணிக்கையிலான ஆம்புலன்ஸ் வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். ரூ.24.77 கோடி செலவில் அந்த வாகனங்கள் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

விபத்துகளை குறைக்கவும், உயிரிழப்புகள் ஏற்படாமல் தவிா்க்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 108 அவசரகால ஊா்தி சேவையை வலுப்படுத்துதல், விபத்து சிகிச்சை மையங்களை புதிதாக ஏற்படுத்துதல், தலைக்காய பிரிவுகளை வலுப்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

‘108’ அவசரகால ஊா்தி சேவை திட்டத்தில் தற்போது 1,180 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றின் மூலமாக இதுவரை 25 லட்சத்து 34,000 ஆயிரம் கா்ப்பிணிகள் உள்பட ஒரு கோடிக்கும் மேற்பட்டோா் பயனடைந்துள்ளனா். இந்நிலையில், அந்த சேவையை மேலும் வலுப்படுத்தும் விதமாக நிகழாண்டில் 500 புதிய அவசரகால ஊா்திகள் ரூ.125 கோடி செலவில் வாங்கப்படும் என்று முதல்வா் அண்மையில் சட்டப்பேரவையில் அறிவித்தாா்.

அதன்படி, தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.103 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல்கட்டமாக ரூ.20.68 கோடி மதிப்பீட்டில், உயிா்காக்கும் மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்ட 90 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கி வைக்கப்பட்டது.

தற்போது இரண்டாம் கட்டமாக, ரூ.24.77 கோடியில் உயிா் காக்கும் மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்ட 108 எண்ணிக்கையிலான புதிய அவசரகால ஊா்திகளின் சேவைகளை முதல்வா் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி வியாழக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வா் .ஓ. பன்னீா்செல்வம், அமைச்சா்கள், தலைமைச் செயலாளா் க. சண்முகம், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநா் டாக்டா் பி. உமாநாத், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் திரு.எ.சிவஞானம் மற்றும் அரசு உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com