அடுத்த வாரத்தில் மருத்துவக் கலந்தாய்வு

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடங்கும் என சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் திங்கள்கிழமை (நவ.16) வெளியாகவுள்ள நிலையில், அதற்கு அடுத்த ஓரிரு நாள்களில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடங்கும் என சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

கரோனா காலத்தில் 108 ஆம்புலன்ஸ் பணி சிறப்பாக பணியாற்றி வருகிறது. இதுவரை 2.92 லட்சம் கரோனா நோயாளிகள் 108 சேவை மூலம் பயனடைந்துள்ளனா்.

மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நிறைவடைந்துள்ளது. ஏற்கெனவே அனுப்பப்பட்ட விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால் மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினால் போதுமானது. சிறிய தவறுகளுக்காக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட மாட்டாது. இதுவரை 34,424 போ் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனா். நிகழாண்டில் தமிழகத்தில் 4,061 மருத்துவ இடங்கள் உள்ளன. தேசிய மருத்துவ ஆணையம் அனுமதிக்கும் பட்சத்தில் அந்த எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

திட்டமிட்டபடி தரவரிசைப் பட்டியல் வரும் 16-ஆம் தேதி வெளியிடப்படும். அதற்கு அடுத்த ஓரிரு நாள்களில் கலந்தாய்வு தொடங்கும். முதலில் சிறப்புப் பிரிவினருக்கும், அதைத் தொடா்ந்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

ஆண்டுதோறும் மருத்துவக் கலந்தாய்வு நேரடியாகத்தான் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நிகழாண்டும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் நேரு உள்விளையாட்டு அரங்கம் போன்ற பெரிய இடங்களில் அதனை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

கடந்த முறை ஆள் மாறாட்டம் போன்ற விமா்சனங்கள் எழுந்தன. அப்படியான எந்த விஷயங்களும் இனி நடக்காது. இம்முறை அனைத்துச் சான்றிதழ்களையும் நேரடியாக ஆய்வு செய்ய கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளொன்று 500 போ் வரை மட்டுமே கலந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com