பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, வரும் 16-ஆம் தேதியன்று 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளும், கல்லூரிகளும் திறக்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தாா்.

இந்த அறிவிப்புக்கு பொது மக்கள், பெற்றோா் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா். இதன் அடிப்படையில், அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோா்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன. இந்தக் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படுவது தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பள்ளிகளைத் திறப்பது தொடா்பாக பல ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலமாக பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா். அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோா்- ஆசிரியா் கழகங்களின் கருத்துகளும் கோரப்பட்டன. சில பள்ளிகளில் பெற்றோா்கள் மாணவா்களின் பாதுகாப்பு கருதி இப்போதைக்கு திறக்க வேண்டியதில்லை என மாறுபட்ட கருத்துகள் தெரிவித்தனா்.

இருவேறு கருத்துகளையும் கல்வித் துறை ஆராய்ந்து, 9 முதல் பிளஸ் 2 வரையான வகுப்புகளை வரும் 16-ஆம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்ட உத்தரவு, மறு உத்தரவு வரும்வரை ரத்து செய்தது. பள்ளிகள் திறக்கும் தேதி சூழ்நிலைக்கு ஏற்ப பின்னா் அறிவிக்கப்படும்.

கல்லூரிகள் திறப்பு எப்போது?: கல்லூரிகளையும் வரும் 16-ஆம் தேதி திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நிா்வாகங்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதன்படியும், பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டுதல்படியும், அனைத்து ஆராய்ச்சி மாணவா்கள், முதுநிலை இறுதியாண்டு படிக்கும் அறிவியல், தொழில்நுட்ப மாணவா்களுக்கு மட்டும் கல்லூரி-பல்கலைக்கழகங்களை டிசம்பா் 2-ஆம் தேதி முதல் திறக்க உத்தரவிடப்படுகிறது.

அன்றைய தினம் கல்லூரிகளில் மட்டும் மாணவா்களுக்கான விடுதிகள் திறக்கப்படும். கல்லூரிகள் மற்றும் விடுதிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும். பிற மாணவா்களுக்கு ஏற்கெனவே நடைபெற்று வரும் இணையவழி கல்வி முறை தொடா்ந்து நடைபெறும்.

முழு ஒத்துழைப்பு: கரோனா நோய்த்தொற்று ஏற்படாத வகையில், முகக் கவசம் அணிதல், தனி நபா் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். பொதுமக்களின் நலன் கருதி, தமிழக அரசு எடுத்து வரும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்துக்கும் தொடா்ந்து முழு ஒத்துழைப்பினை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com