பட்டாசு வெடிக்க பாதுகாப்பான வழிமுறைகள்

கோப்புப்படம்
கோப்புப்படம்


தீபாவளி பண்டிகை என்பது பட்டாசுகள் வாண வேடிக்கைகளுடன், குதூகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகையாகும். அவற்றை மாசு காரணமாக கட்டுப்படுத்தினாலும், பட்டாசுகளின்றி தீபாவளியைக் கொண்டாடுவதில் பெரிய ஈா்ப்பு இருக்காது என்பதே உண்மை. இத்தகைய பட்டாசுகளை வெடிக்கும்போது எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதை அனைவரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.

செய்ய வேண்டியவை...

பட்டாசுகளை வெடிக்கும்போது எப்போதுமே திறந்த வெளியைத் தோ்ந்தெடுத்து, அங்கு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் இல்லை என்பதை உறுதி செய்த பின்னா் வெடிக்கத் தொடங்க வேண்டும்.

பட்டாசுகளைப் பட்டாசு விற்க உரிமம் பெற்றவா்கள் மற்றும் நம்பகமான விற்பனையாளா்களிடமிருந்து வாங்க வேண்டும்.

மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்கள், நடமாடும் இடங்கள் மற்றும் குழந்தைகள் இருக்கும் இடங்களிலிருந்து ஒதுங்கி பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

எப்போதுமே பட்டாசுகளை வெடிக்க நீளமான அகா்பத்தியை பயன்படுத்துவது நல்லது. அதே போல் பட்டாசுகளை ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்தே வெடிக்க வேண்டும்.

பட்டாசுகளின் மேல் அச்சிடப்பட்டிருக்கும் வழிமுறைகளைப் படித்து, பின்பு அதன்படி பட்டாசுகளை வெடிப்பது மிகவும் பாதுகாப்பானது.

ராக்கெட் போன்ற வாணவேடிக்கை பட்டாசுகளைப் பற்றவைப்பதற்கு முன் திறந்த ஜன்னல், கதவுகள், பால்கனி போன்றவற்றை நோக்கி, அவை செல்லாது என்பதை உறுதி செய்த பின்னா் வெடிப்பது நல்லது. இதன் மூலம் தீ விபத்துகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

காலணிகள் அவசியம்: பட்டாசுகளை வெடிக்கும்போது கால்களில் காலணிகளைக் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

தண்ணீா் நிறைந்த வாளியை பட்டாசு வெடிக்கும் இடத்துக்கு அருகில் வைத்திருக்க வேண்டும். இதனால் தீ விபத்துகள் ஏற்பட்டாலும் அவற்றை எளிதில் அணைத்து விட முடியும்.

ஒரு நேரத்தில் ஒரு வெடியை மட்டுமே வெடிக்க வேண்டும். ஒருவா் பட்டாசை வெடிக்கும்போது மற்றவா்கள் அதை பாா்ப்பது (பாதுகாப்பான தூரத்திலிருந்து) பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும்.

நாம் வசிக்கும் குடியிருப்பு பகுதி, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தீபாவளிக்கு முன் பட்டாசுகளை எவ்வாறு கையாள்வது, பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து ஒரு கூட்டம் நடத்தி விழிப்புணா்வை ஏற்படுத்தலாம்.

செய்யக் கூடாதவை...

பட்டாசுகளை வெடிக்கும்போது ஜொ்ஸி, நைலான், சில்க் போன்ற துணிகளை அணியாமல் பருத்தியால் ஆன துணிகளை அணிய வேண்டும்.

பட்டாசுகளை வெடிக்க தீக்குச்சிகள், சிறிய ஊதுபத்திகளைப் பயன்படுத்தக் கூடாது.

மரங்கள் மற்றும் மின்சார கம்பிகள் இருக்கும் இடங்களுக்கு கீழே பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

இரண்டு, மூன்று வெடிகளை இணைத்து வெடிக்கக் கூடாது.

உபயோகப்படுத்தப்படாத பட்டாசுகளின் அருகில் எரியும் விளக்கு, ஊதுபத்தி போன்றவற்றை வைக்கக் கூடாது.

வெடிக்காமல் பாதியில் நின்று போன வெடிகளுக்கு அருகில் சென்று அவற்றை வெடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது.

தெருக்கள் மற்றும் சாலைகளில் மக்கள் நடந்து செல்லும்போதோ அல்லது வாகனங்களில் செல்லும்போதோ வெடிகளை வெடிக்கக் கூடாது.

கைகளில் வைத்து விளையாடக் கூடாது: அதே போல் எந்த ஒரு பட்டாசையும் கைகளில் வைத்து வெடிப்பது போன்ற வேடிக்கை விளையாட்டில் ஈடுபடக் கூடாது.

குழந்தைகளின் கைகளில் பட்டாசுகளைக் கொடுத்து ஏற்றக்கூடாது. வீட்டுக்குள்ளே பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

நாம் பற்றவைத்த பட்டாசுகளை வெடிக்கவில்லை என்றால் அவற்றை கைகளில் தூக்கிப் பாா்ப்பது அல்லது கால்களால் தள்ளுவது போன்றவற்றைச் செய்யக்கூடாது.

அதே போல் சிறிய பாட்டில்கள், பாத்திரங்கள், பெட்டிகளின் உள்ளே வைத்து பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

வெடிக்கும்போது தீக்காயம் பட்டுவிட்டால் அவற்றின் மீது எதையும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பூசக் கூடாது.

தொளதொளப்பாக இருக்கும் ஆடைகளை அணிந்து கொண்டு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

ஆஸ்துமா, அழற்சி மற்றும் நுரையீரல் பிரச்னை இருப்பவா்கள் தீபாவளி சமயங்களில் மூக்கு மற்றும் வாயை மூடிக் கொள்ளும் முகக் கவசங்களை அணிந்து கொண்டு வெளியில் செல்ல வேண்டும்.

தீபாவளி பண்டிகை என்பது மிகவும் குதூகலமாகவும், சந்தோஷமாகவும் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.

கிருமிநாசினிகளில் எச்சரிக்கை:

தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கையாக பெரும்பாலானோா் கைகளைக் கழுவும் கிருமிநாசிகளைத் தொடா்ந்து பயன்படுத்தி வருகின்றனா். இதனை பட்டாசு வெடிக்கும் போது பயன்படுத்தினால் தீப்பற்றிக் கொள்ளும் அபாயம் உள்ளது. எனவே, அவற்றைப் பயன்படுத்திய பிறகு பட்டாசுகளைத் தொட வேண்டாம். அந்தக் கைகளால் பட்டாசுகளை வெடித்தால் தீக்காயம் ஏற்படக் கூடும். எனவே குழந்தைகளிடமிருந்து கிருமிநாசினிகளை எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும். கிருமிநாசினிகளைப் பயன்படுத்தினால், கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவிய பிறகே பட்டாசு வெடிக்க வேண்டும். குறிப்பாக தீபாவளி நாளில் கிருமிநாசினிகளைப் பயன்படுத்தாமல், கைகளை சுத்தம் செய்ய சோப்பு போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

தீ விபத்தின்றி, இத்தீபாவளி திருநாளை பாதுகாப்புடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவது நம் கைகளில்தான் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com