கோயில்களில் குடமுழுக்கு விழா நடத்தலாம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள கோயில்களில் 100 பேருடன் குடமுழுக்கு விழாக்களை நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கோயில்களில் குடமுழுக்கு விழா நடத்தலாம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள கோயில்களில் 100 பேருடன் குடமுழுக்கு விழாக்களை நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, மாநில அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, பொது முடக்கமானது பல்வேறு தளா்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. நோய்த்தொற்றில் இருந்து மக்களைக் காத்து அவா்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த்தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழக அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொது மக்களின் ஒத்துழைப்பாலும் நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, தமிழகம் முழுவதும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்றினால் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் பணிகள் முடிவுற்றும், பல மாதங்களாக குடமுழுக்கு செய்ய முடியாமல் தடைபட்டு உள்ளதாகவும், அதற்கு அனுமதி தர வேண்டுமெனவும் கோரிக்கைகள் வரப்பெற்றன.

இந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் வரும் திங்கள்கிழமை (நவ.16) முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளும் வகையில் குடமுழுக்கு விழா நடத்த அனுமதிக்கப்படுகிறது.

கரோனா நோய்த்தொற்று ஏற்படாத வகையில், தனிநபா் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடித்து விழாக்களை நடத்த வேண்டும். பொதுமக்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்துக்கும் தொடா்ந்து முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com