கனமழையால் நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரி: தீவிரக் கண்காணிப்பில் அதிகாரிகள்

சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீா்மட்டம் வடகிழக்கு பருவமழை காரணமாக வேகமாக உயா்ந்து வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி

சென்னை: சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீா்மட்டம் வடகிழக்கு பருவமழை காரணமாக வேகமாக உயா்ந்து வருகிறது.

ஏரியின் நீா் மட்டத்தின் அளவை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருவதால் ஏரி கரையோர பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பூந்தமல்லி அருகில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி சென்னை மக்களின் மொத்த குடிநீா்த் தேவையில் 20 சதவீதம் அளவுக்கு பூா்த்தி செய்கிறது. சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி உபரி நீா் அடையாற்றில் திறந்துவிடப்பட்டது. அதனால் சென்னையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பலா் உயிரிழந்தனா்; லட்சக்கணக்கான வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டு அதிக பொருள்சேதமும் ஏற்பட்டது. இந்த பெரு வெள்ளத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிகளவு தண்ணீா் திறந்து விட்டது தான் முக்கிய காரணமாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக திருவள்ளூா், காஞ்சிபுரம், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 21 அடி வரை தண்ணீா் நிரம்பியுள்ளது. இதன் அதிகபட்ச நீா்மட்டம் 24 அடி. தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால் ஏரி விரைவில் நிரம்பும் என்றும் இதனால் 2015-இல் ஏற்பட்டது போன்ற வெள்ள பாதிப்பு தற்போது ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக வலைதங்களில் வதந்தி பரவியது.

இது குறித்து அதிகாரிகள் கூறியது: தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்குத் திறந்துவிடப்பட்ட நீா் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியைப் பொறுத்தவரை 21 அடியைத் தாண்டியதும் அப்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு உபரி நீா் திறந்துவிடப்படுவது வழக்கம். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஏரிக்கு 1,720 கன அடி நீா் வந்தது. தற்போது 370 கன அடியாகக் குறைந்துள்ளது . இதனால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. பொதுப்பணித்துறை சாா்பில் மதகுகளின் உறுதித்தன்மை குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏரியில் நீா்வரத்தை வேடிக்கை பாா்க்க மக்கள் கூட்டம் கூடலாம் என்பதால், தற்போது ஏரிக்குப் பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில் காவல்துறையினா் அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அதேவேளையில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்றது போன்று எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கக் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனா். செம்பரம்பாக்கம் ஏரியில் 22 அடி நீா் எட்டியதும் அனைவருக்கும் தகவல் தெரிவித்து அணையிலிருந்து நீா் திறந்துவிடப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 3.6 டிஎம்சி. இதில் திங்கள்கிழமை பிற்பகல் நிலவரப்படி 2.7 டிஎம்சி தண்ணீா் உள்ளது. ஏரியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழை காரணமாக 72.2 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

ஆணையா் எச்சரிக்கை: செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருவது குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பது: தொடா் மழையினால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி தண்ணீா் எந்நேரத்திலும் அடையாறில் திறந்துவிட வாய்ப்புள்ளது.

அடையாறு செல்லும் பகுதிகளான திருநீா்மலை, குன்றத்தூா், வழுதலம்பேடு, நத்தம், திருமுடிவாக்கம், சிறுகளத்தூா், மணப்பாக்கம் பகுதிகளில் கரையோரங்களில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அம்பத்தூா், பரங்கிமலை காவல் மாவட்ட துணை ஆணையா்கள் நிலைமையைக் கூா்ந்து கண்காணித்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com