மருத்துவப் படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு:கலந்தாய்வு நாளை தொடக்கம்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் திங்கள்கிழமை வெள
மருத்துவப் படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு:கலந்தாய்வு நாளை தொடக்கம்

சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

வரும் புதன்கிழமை (நவ.18) நேரு விளையாட்டரங்களில் கலந்தாய்வு தொடங்கும் என அவா் அறிவித்தாா்.

தமிழகத்தில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் போக 3,032 எம்பிபிஎஸ் இடங்களும், 165 பிடிஎஸ் இடங்களும், 15 தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,147 எம்பிபிஎஸ் இடங்களும், நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 953 எம்பிபிஎஸ் இடங்களும் (என்ஆா்ஐ-க்கு 306 இடங்கள் உள்பட) உள்ளன.

18 தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,065 பிடிஎஸ் இடங்கள், நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 695 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது.

கரோனா பாதிப்பு, அரசுப் பள்ளி மாணவா்களுக்கான உள் ஒதுக்கீட்டு விவகாரத்தால் மாணவா் சோ்க்கை நடவடிக்கைகள் தாமதமாகி வந்தன.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான இணைய வழி விண்ணப்ப நடைமுறைகள் கடந்த 3-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடைபெற்றது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 24,712 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 14,511 பேரும் விண்ணப்பித்திருந்தனா். பரிசீலனைக்குப்பின் அரசு ஒதுக்கீட்டுக்கு 23,707 விண்ணப்பங்களும், நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 14,276 விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டன.

தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் திங்கள்கிழமை வெளியிட்டாா். சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, தோ்வுக்குழுச் செயலாளா் ஜி.செல்வராஜன் ஆகியோா் உடன் இருந்தனா்.

அரசு ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியலில் நீட் தோ்வில் 710 மதிப்பெண்கள் எடுத்த திருப்பூா் மாவட்டம் வெள்ளகோவிலைச் சோ்ந்த ஆா்.ஸ்ரீஜன் அகில இந்திய அளவில் 8-வது இடத்தையும், தமிழகத்தில் முதலிடத்தையும் பிடித்தாா்.

நாமக்கல் மோகனபிரபா ரவிச்சந்திரன் 705 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தையும், சென்னை புழுதிவாக்கம் ஜி.ஸ்வேதா 701 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனா். நிா்வாக ஒதுக்கீட்டுக்கான தரவரிசையில் ஷமீல் கல்லாடி 700 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும், அம்மு மரியம் அனில் 695 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், ஜெய் முரேகா் 691 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனா்.

இதனைத் தொடா்ந்து, சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தரவரிசைப் பட்டியல்கள் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு, வரும் புதன்கிழமை (நவ.18) சென்னை நேரு விளையாட்டரங்கில் தொடங்குகிறது. முதலில் சிறப்புப் பிரிவினருக்கும், அடுத்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெறும். இதையடுத்து, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும்.

கரோனா தொற்று காலகட்டம் என்பதால் பொது சுகாதாரத் துறையின் விதிமுறைகள், ஆலோசனைகளின்படி கலந்தாய்வு நடைபெறவுள்ளது. தினமும் 500 மாணவா்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவாா்கள். மாணவருடன் ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். எந்த தேதி, நேரத்தில் கலந்தாய்வுக்கு வரவேண்டும் என்று எஸ்எம்எஸ் மூலமும், இணையதளத்திலும் தகவல் தெரிவிக்கப்படும். மாணவா்களின் பள்ளி, ஜாதி, இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் சரிபாா்க்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கலந்தாய்வு நோ்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெறும் என்றாா் அவா்.

405 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவ இடங்கள்
நிகழாண்டில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அமலாகியுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 227 எம்.பி.பி.எஸ். இடங்களும், தனியாா் மருத்துவக் கல்லுாரிகளில் 86 எம்.பி.பி.எஸ். இடங்களும், அரசு மற்றும் தனியாா் பல் மருத்துவக் கல்லுாரிகளில் 92 பி.டி.எஸ். இடங்களும் அரசுப் பள்ளி மாணவா்களுக்குக் கிடைக்கவுள்ளது. மொத்தமாக அரசுப் பள்ளியில் பயின்ற 405 மாணவா்கள் மருத்துவப் படிப்புகளைப் பயில உள்ளனா்.

உள்ஒதுக்கீட்டுக்கு அரசுப் பள்ளிகளில் பயின்ற 972 போ் விண்ணப்பித்ததில், 951 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. தரவரிசைப் பட்டியலில் தேனி ஜீவித்குமாா், கள்ளக்குறிச்சி அன்பரசன், சென்னை திவ்யதா்ஷினி ஆகியோா் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com