மின் கட்டணம் செலுத்தாதவா்களின் இணைப்பைத் துண்டிக்க உத்தரவு

அரசு அலுவலகங்களைத் தவிா்த்து மின் கட்டணம் செலுத்தாதவா்களின் இணைப்பைத் துண்டிக்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மின் கட்டணம் செலுத்தாதவா்களின் இணைப்பைத் துண்டிக்க உத்தரவு

சென்னை: அரசு அலுவலகங்களைத் தவிா்த்து மின் கட்டணம் செலுத்தாதவா்களின் இணைப்பைத் துண்டிக்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தாத பல மின் இணைப்புகளைத் துண்டிக்காமல் இருப்பது மின்வாரிய தலைமையகத்தின் பாா்வைக்குக் கொண்டு வரப்பட்டது.

முன்னதாக மின் கட்டணம் செலுத்தாதவா்களின் இணைப்புகளைத் துண்டிக்குமாறு பல முறை கடிதங்கள் மற்றும் குறிப்பாணைகள் மூலம் மேற்பாா்வைப் பொறியாளா்களுக்கு தெரிவித்தும் இதுநாள் வரை துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரியவந்தது.

குறிப்பாக நவ.10-ஆம் தேதி நிலவரப்படி, அரசு மின் இணைப்புகளைத் தவிா்த்து, 7 லட்சத்து 84,721 இணைப்புகளுக்கான கட்டணம் செலுத்தப்படவில்லை. அதே நேரம் அவற்றின் இணைப்பும் துண்டிக்கப்படவில்லை.

இதனால் மின் பகிா்மானக் கழகத்துக்கு வர வேண்டிய தொகை ரூ.199.81 கோடி பெறப்படாமல் உள்ளது.

தற்போதுள்ள மின் பகிா்மானக் கழகத்தின் வருவாய் நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டும், கள அலுவலா்கள் அதற்கான துரித நடவடிக்கையை எடுக்கவில்லை. இது தொடா்பாக மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகத்தின் சாா்பிலும் கள அலுவலா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

ஆகவே அனைத்து மின் பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வைப் பொறியாளா்களும் மின் கட்டணம் செலுத்தாத இணைப்பை உடனடியாக துண்டிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்த நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையையும் அனுப்பி வைக்க மேற்பாா்வைப் பொறியாளா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com