சண்முகாநதி அணைப்பகுதியில் கன மழை: ஒரே நாளில் 8 அடி உயர்ந்தது

தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி  அருகே உள்ள சண்முகாநதியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கன மழை காரணமாக ஒரே நாளில் 8.90 அடி உயரத்தை எட்டியது.
புதன்கிழமை 45.90 அடி உயரத்தை எட்டிய சண்முகா நதி அணையின் தோற்றம்.
புதன்கிழமை 45.90 அடி உயரத்தை எட்டிய சண்முகா நதி அணையின் தோற்றம்.

கம்பம்: தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி  அருகே உள்ள சண்முகாநதியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கன மழை காரணமாக ஒரே நாளில் 8.90 அடி உயரத்தை எட்டியது.

தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக கடந்த மூன்று நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப்பெரியாறு அணை, சண்முகாநதி அணை மற்றும் சுருளி அருவி ஆகியவைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

சண்முகாநதி அணை
ராயப்பன்பட்டி அருகே உள்ள சண்முகாநதி அணையில் செவ்வாய்க்கிழமை அணையின் நீர்மட்டம் 37.00 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 52.55அடி). அணைக்குள் நீர் இருப்பு 37.41 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர்வரத்து விநாடிக்கு 18 கன அடியாகவும் இருந்தது. நீர் வெளியேற்றம் இல்லை.

அதே நேரத்தில் புதன்கிழமை நீர் மட்டம் 45.90 அடியாகவும், நீர் இருப்பு 59.22 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 252 கன அடியாகவும் இருந்தது. ஒரே நாளில் சண்முகாநதி அணையின் நீர் மட்டம்  8.90 அடி உயரத்தை எட்டியதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இது குறித்து அணைப்பகுதி பொறியாளர் ஒருவர் கூறியது, சண்முகாநதி அணையின் நீர்வரத்து பகுதிகளான பச்சக்கூமாச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை,. 104 மில்லி மீட்டர் அளவில்,  பெய்தது. இதனால்  ஒரே நாளில் 8.90 அடியை எட்டியது. மொத்த உயரம் 52.55 அடி என்பதால் தொடர்மழை பெய்தால் அணை முழுக்கொள்ளளவை எட்டும் என்றார்.    

2 அடி உயர்ந்த முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாற்றில் 44.6 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 56.6 மி.மீ., மழையும் பெய்தது. இதனால் செவ்வாய்க்கிழமை அணைக்குள் நீர்வரத்து 2,985 கன அடி வந்த நிலையில், புதன்கிழமை அணைக்குள் விநாடிக்கு 6,098 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் செவ்வாய்க்கிழமை அணையின் நீர்மட்டம் 123.10 அடி உயரமாக இருந்தது, புதன்கிழமை 125.20 அடியாக உயர்ந்து ஒரே நாளில் 2 அடி உயரத்தை எட்டியது. அணையில் நீர் இருப்பு 3,661 மில்லியன் கன அடியாக இருந்தது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,267 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

லோயர்கேம்ப்பில் மின் உற்பத்தி அதிகரிப்பு
முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வெளியேற்றப்படும், 1,267 கன அடி தண்ணீரால், லோயர்கேம்ப்பில் உள்ள நான்கு மின்னாக்கிகளில், முதல் அலகில் 42 மெகாவாட், இரண்டாவது அலகில் 38 மெகாவாட், மூன்றாவது அலகில் 42 மெகாவாட் என மொத்தம் 122 மெகாவாட் உற்பத்தியானது. அதே நேரத்தில் செவ்வாய்க்கிழமை 107 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுருளி அருவியில் வெள்ளம்

சுருளி அருவி

சுருளி அருவியின் நீர்வரத்து பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை நீரோடைகளில் பலத்த மழை பெய்ததால், அருவிப்பகுதியில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அருவிக்கு செல்ல தடை இருப்பதால், வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com