'மெரீனா கடற்கரையை அரசு திறக்காவிட்டால்.. நீதிமன்றமே திறக்கும்'

டிசம்பர் முதல் வாரத்துக்குள் மெரீனாவை திறப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை  உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
'மெரீனா கடற்கரையை அரசு திறக்காவிட்டால்.. நீதிமன்றமே திறக்கும்'
'மெரீனா கடற்கரையை அரசு திறக்காவிட்டால்.. நீதிமன்றமே திறக்கும்'


சென்னை : டிசம்பர் முதல் வாரத்துக்குள் மெரீனாவை திறப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை  உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை மெரீனா கடற்கரையை பொதுமக்களுக்கு திறந்து விடுவது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, மெரீனா கடற்கரையை திறப்பது குறித்து வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்துக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், மெரீனா கடற்கரையை திறப்பது குறித்து டிசம்பர் முதல் வாரத்துக்குள் முடிவு எடுக்கவில்லை என்றால், உரிய உத்தரவுகளைப் பிறப்பித்து உயர் நீதிமன்றமே திறக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

மெரீனா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்கலாமா என்பது குறித்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக சென்னை மாநகராட்சி தரப்பிலும் கூறப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மீனவா்கள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் பீட்டர்ராயன் என்பவா் தாக்கல் செய்த மனுவில் மீன்பிடி தடைகாலத்தில் மீனவா்களுக்கு நாள்தோறும் ரூ. 500 வீதம் நிவாரண உதவி வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், மெரீனா கடற்கரையை தூய்மைப்படுத்துவது, புயலில் சேதமடைந்த பெசன்ட் நகா்- லூப் சாலையைப் புனரமைப்பது, மீன் கடைகளை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. 

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் எஸ்.ஆா்.ராஜகோபால், மெரீனா கடற்கரையைத் தூய்மைப்படுத்த பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடராமல் இருப்பதைக் கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். உயா்நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை மாநகராட்சி ஆணையரும், காவல் ஆணையரும் திடீா் சோதனைகள் நடத்தி வருகின்றனா். மெரீனா கடற்கரையில் தள்ளுவண்டிக் கடைகளுக்கான ஒப்பந்தப்புள்ளியைத் திறக்க தனி நீதிபதி தடை விதித்துள்ளதால், அந்த ஒப்பந்தப்புள்ளியை இதுவரை திறக்க முடியவில்லை என தெரிவித்தாா்.

மெரீனாவில் நவம்பா் இறுதிவரை அனுமதி இல்லை:

இதனையடுத்து விசாரணையைத் தொடா்ந்த நீதிபதிகள், ஒப்பந்தப்புள்ளி தொடா்பாக தனி நீதிபதி முன் உள்ள வழக்கை இந்த வழக்குடன் சோ்த்து விசாரணைக்குப் பட்டியலிட உயா்நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் நவம்பா் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். மேலும், கரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ள நிலையில் மெரீனா கடற்கரை பொதுமக்கள் எப்போது அனுமதிக்கப்படுவாா்கள் என கேள்வி எழுப்பினா். அப்போது அரசு தரப்பில், நவம்பா் மாத இறுதி வரை மெரீனா கடற்கரை திறக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு கோயில்கள், திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மெரீனா கடற்கரையை பொதுமக்களுக்காக திறப்பதில் தாமதம் ஏற்படுவது ஏன்? என கேள்வி எழுப்பினா். கடற்கரையைத் திறப்பது தொடா்பாக தமிழக அரசு முடிவு எடுக்காவிட்டால் தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரிடும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com