ராணுவ அதிகாரிகள் பெரியார் பல்கலையில் முதுநிலை பயிலப் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்திய இராணுவ அதிகாரிகள் பெரியார் பல்கலையில் முதுநிலை கல்வி பயிலப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டனர். 
பெரியார் பல்கலையில் முதுநிலை பயிலப் புரிந்துணர்வு ஒப்பந்தம்
பெரியார் பல்கலையில் முதுநிலை பயிலப் புரிந்துணர்வு ஒப்பந்தம்

 
தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிகோபர் தேசிய மாணவர் படைப்பிரிவுகளைச் சேர்ந்த இந்திய இராணுவ அதிகாரிகள் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மேலாண்மை மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளைப் பயின்று பட்டம் பெற வழிவகை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் பெரியார் பல்கலைக்கழகம் - தேசிய மாணவர் படை இயக்ககம் இடையே இன்று (18.11.2020) கையெழுத்தானது.

சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் உயர்கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், பெரியார் பல்கலைக்கழகம் கடந்த 1997-ல் தொடங்கப்பட்டது. தற்போது 27 ஆராய்ச்சித்துறைகளுடன் இயங்கி வரும் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்விப் பரப்பை விரிவாக்கும் வண்ணம் இந்திய இராணுவத்தில் பணியாற்றும் அதிகாரிகள் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலைக் கல்வி பயின்றிடும் வகையில், தமிழகத்தில் முதல்முறையாக  புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையொட்டி, பெரியார் பல்கலைக்கழகத்துடன் தேசிய மாணவர் படை இயக்குநரகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பொ.குழந்தைவேல் முன்னிலையில் நடைபெற்றது. பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் கே.தங்கவேல், தேசிய மாணவர் படை இயக்குநரகம் சார்பில் கோவை மண்டல குரூப் கமாண்டர் கர்னல் எல்.சி.எஸ். நாயுடு ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
 
பெரியார் பல்கலைக்கழக மேலாண்மைத் துறையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து துணைவேந்தர் பேராசிரியர் பொ.குழந்தைவேல் கூறியது.     

தன்னலம் கருதாமல், நாட்டிற்காக கடமையாற்றிடும் இராணுவ வீரர்களின் கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்ளும் வண்ணம் பெரியார் பல்கலைக்கழகம் தமிழகத்தில் முதல்முறையாக ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் நாட்டுக்காக தன்னலமற்று செயலாற்றும் இராணுவ அதிகாரிகள் தங்கள் கல்வி நிலையை மேம்படுத்திக் கொள்ளவும், அவர்களின் நிர்வாகத் திறன் மற்றும் ஆளுமையை பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள் பெற்று பயனடையும் வகையிலும் பல தொடர் செயல்பாடுகள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளன. 

தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிகோபரில் உள்ள தேசிய மாணவர் படை இயக்குனரகத்தில் பணியாற்றும் முப்படைகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பெரியார் பல்கலைக்கழக மேலாண்மைத் துறையில் முதுநிலை பட்டப் படிப்பு, முதுநிலை பட்டயப்படிப்பு பயின்றிட வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழக மேலாண்மைத்துறையில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் நூற்றுக்கணக்கான இராணுவ அதிகாரிகள் முதுநிலைப் பட்டம் பெற்று தங்களுடைய பணிக்காலத்திற்குப் பிறகும், சிறப்பான வேலைவாய்ப்பினை பெறுவதற்கான சூழல் உருவாகும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழகத் தேர்வாணையர் (பொறுப்பு) பேராசிரியர் எஸ்.கதிரவன், புல முதன்மையர் பேராசிரியர் அ.முத்துசாமி, தேசிய மாணவர் படை கமாண்டிங் அலுவலர் கர்னல் பி.தாமஸ் பிலிப், விங் கமாண்டர் யுவராஜ்,கோவை மண்டல தேசிய மாணவர் படை அலுவலர் பேராசிரியர் எம்.டி.கண்ணன், மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் வி.ஆர்.பழனிவேல் மற்றும் மேலாண்மைத்துறைப் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com