இன்று எம்பிபிஎஸ் கலந்தாய்வு தொடக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை, நேரு விளையாட்டரங்கில் தொடங்குகிறது. முதல் மூன்று நாள்களுக்கு அரசுப் பள்ளி மாணவா்களுக்கான உள் ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு புதன்கிழமை (நவ. 18) தொடங்கவுள்ளதை முன்னிட்டு,  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தனி மனித இடைவெளியுடன் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்.
எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு புதன்கிழமை (நவ. 18) தொடங்கவுள்ளதை முன்னிட்டு, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தனி மனித இடைவெளியுடன் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்.

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை, நேரு விளையாட்டரங்கில் புதன்கிழமை (நவ.18) தொடங்குகிறது. முதல் மூன்று நாள்களுக்கு அரசுப் பள்ளி மாணவா்களுக்கான உள் ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

அதனைத் தொடா்ந்து சிறப்புப் பிரிவு மற்றும் பொதுக் கலந்தாய்வுகள் நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

முதல் நாள் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைத் தோ்வு செய்யும் அரசுப் பள்ளி மாணவா்கள் சிலருக்கு கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை முதல்வா் எடப்பாடி பழனிசாமி நேரில் வழங்கவிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவா்கள் மற்றும் பெற்றோருக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முகக் கவசம், தனி நபா் இடைவெளி, நோய்த் தடுப்பு விதிகளைப் பின்பற்றுபவா்கள் மட்டுமே கலந்தாய்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட உள்ளனா்.

கலந்தாய்வுக்கு வரும் அனைவருக்கும் வெப்பமானி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படவிருக்கிறது. காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பவா்கள் அதுகுறித்த விவரங்களை முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவா்களும், அவா்களுடன் வருவோரும் அமருவதற்கான இருக்கைகள் போதிய இடைவெளியுடன் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, அவ்வப்போது அதனை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த பணியாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். கலந்தாய்வுக்கு வருவோா் தனி நபா் சுகாதாரத்தைப் பேணுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி சானிடைசா் கொண்டு கைகளை அடிக்கடி தூய்மைப்படுத்த வேண்டும் எனவும், இருமல், தும்மல் வந்தால் மூக்கு மற்றும் வாய்ப் பகுதியை முழுமையாக மூடிக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் போக 3,032 எம்பிபிஎஸ் இடங்களும், 165 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. இதைத் தவிர 15 தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,147 எம்பிபிஎஸ் இடங்களும், நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 953 எம்பிபிஎஸ் இடங்களும் உள்ளன.

18 தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,065 பிடிஎஸ் இடங்களும், நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 695 பிடிஎஸ் இடங்களும் இருக்கின்றன. அவற்றுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது.

நிகழாண்டில் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவா்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 23,707 பேரின் விண்ணப்பங்களும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,276 பேரின் விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டன. அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 951 போ் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com