லாரிகளில் அதிக‌ சுமை ஏற்ற தடை விதிக்க வேண்டும்: தென் மண்டல லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

லாரிகளில் அனுமதிக்கப்பட்ட எடையை காட்டிலும் அதிக அளவு சுமையேற்ற தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என தென் மண்டல லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
தருமபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறார் லாரி உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் சண்முகப்பா.
தருமபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறார் லாரி உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் சண்முகப்பா.

தருமபுரி: லாரிகளில் அனுமதிக்கப்பட்ட எடையை காட்டிலும் அதிக அளவு சுமையேற்ற தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என தென் மண்டல லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தென் மண்டல லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதன்கிழமை தருமபுரியில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் பங்கேற்ற அச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சண்முகப்பா செய்தியாளர்களிடம் கூறியது: புதிய மோட்டார் வாகன சட்டத்தில், லாரிகளில் அனுமதிக்கப்பட்ட எடையை காட்டிலும் கூடுதலாக அதாவது அதிக உயரம், அகலத்துக்கு சுமை ஏற்ற தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வாறு அதிக அளவு சுமை ஏற்றும் லாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இச் சட்டம் அருகாமையில் உள்ள கர்நாடக மாநிலத்தில் அமலில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் இச் சட்டம் இதுவரை அமல்படுத்தவில்லை.

தமிழகத்தில் தீப்பெட்டி, ஜவுளிகள் இவ்வாறு அதிக எடையிலும் அகலம் அதிகமாகவும் ஏற்றப்படுகிறது. இதனால் சாலையில் விபத்துகள் நிகழ்கின்றன. மேலும் இந்த வாகனங்கள் செல்லும் போது சாலையில் வேறு வாகனங்கள் பயணிக்க இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே இதனை தவிர்க்க, லாரிகளில் அதிக உயரம் மற்றும் அகலத்துக்கு சுமை ஏற்ற தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். லாரி உரிமையாளர்களும் இதிலுள்ள பிரச்னைகளை களைய அதிக சுமை ஏற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

இக் கூட்டத்தில் தமிழக லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் குமாரசாமி, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் மதன்லால் அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com