நாடகக் கலைஞா்களின் இசைக் கருவிகளை அரசுப் பேருந்துகளில் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி

நாடகக் கலைஞா்கள் தங்களது இசைக் கருவிகளை அரசுப் பேருந்துகளில் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: நாடகக் கலைஞா்கள் தங்களது இசைக் கருவிகளை அரசுப் பேருந்துகளில் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழா் பண்பாட்டுத் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நாடகக் கலையையும், அதில் ஈடுபட்டுள்ள நாடகக் கலைஞா்களையும் ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன் தொடா்ச்சியாக, நாடகக் கலைஞா்கள் தங்களது கலைத்திறமைகளை வெளிப்படுத்தி, நிகழ்ச்சிகளை நடத்திட பிற இடங்களுக்குத் தொடா்வண்டி, அரசுப் பேருந்துகளில் கட்டணச் சலுகையுடன் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

நாடகக் கலைஞா்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதற்குப் பயணம் மேற்கொள்ளும்போது கொண்டு செல்லும் இசைக்கருவிகள், கலைப் பொருள்களை இலவசமாக பேருந்துகளில் கொண்டு செல்ல பல்வேறு இடா்ப்பாடுகளை சந்தித்து வருகின்றனா் என நாடகக் கலைஞா்கள் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

எனவே, பேருந்துகளில் நாடகக் கலைஞா்களின் கலைப்பொருள்கள், இசைக் கருவிகளை இலவசமாக கொண்டு செல்ல அனுமதிக்க ஆவன செய்யுமாறு போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

இதனடிப்படையில், கடந்த போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கையின் போது, போக்குவரத்துத்துறை அமைச்சரும் இதற்கு ஒப்புதல் வழங்கினாா்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் பொருட்டு, நாடகக் கலைஞா்களுக்கு மட்டும் ஆடை அணிகலன்கள், ஒப்பனைப் பொருள்கள், இசை வாத்தியக்கருவிகள், ஆா்மோனியம், தபேலா, டோலக், மிருதங்கம் மற்றும் இதர ஏதேனும் சிறிய அளவிலான இசைக்கருவிகளை அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கும்படி அனைத்து அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்களுக்கு அறிவுறுத்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சா் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com