மழை தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்திகள், தவறான தகவல்கள் பரப்புவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்
மழை தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை
மழை தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்திகள், தவறான தகவல்கள் பரப்புவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்பு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தற்போது எதிர்கொண்டு வரும் வடகிழக்கு பருவமழையால் நீர் சேமிப்பு, உபரி நீர் வெளியேற்றத்தின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து தமிழக முதல்வரின் உத்தரவின்படி 36 மாவட்டங்களிலும் சென்னை பெருநகர மாநகராட்சி 15 மண்டலங்களிலும் பேரிடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு அறிவுரைகள் வழங்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழை தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை சார்பில் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு பணியினை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். அவ்வாறு ஆதாரமற்ற செய்திகளை வெளியிடும் சமூக வலைதங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ள உபரி நீர் வெளியேற்றம் தொடர்பாக அணைகள் மற்றும் ஏரிகளில் நிலவரங்களை பொதுப்பணி துறை உட்பட மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் பிற துறை அதிகாரிகள் கண்காணித்து அரசுக்கு தகவல்களை அளித்து வருகின்றனர். 

அந்த தகவல்களின் அடிப்படையில் அரசு தரும் அறிக்கைகள், அறிவிப்புக்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மொத்தமுள்ள 14,144 ஏரிகளில், இதுவரை 779 ஏரிகளில் 100 சதவீதம் நீர் முழு கொள்ளளவு எட்டியுள்ளதாகவும், உபரி நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், 24 மணி நேரமும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பாசன ஏரிகள் 9521 ஏரிகளில் 714 ஏரிகள் 100% முழு கொள்ளளவு எட்டியுள்ளது.

ஸ்ரீபெரும்பத்தூர் ஏரி 87%, பிள்ளைப்பாக்கம் ஏரி 89%, நேமம் ஏரி 20% நிரம்பியுள்ளது. செம்பரபாக்கம் ஏரி நிரம்பும் போது அடையாறு ஆற்றில் குறைந்த அளவு நீர் மட்டும் வெளியேற்றப்படும் சூழல் தற்போது உள்ளது.

மணிமங்கலம், சோமனூர் ஆகிய இடங்களில் தண்ணீர் அதிகமானாலும் அனைத்து சூழலையும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது, இதற்கு போதுமான ஒத்துழைப்பை பொதுமக்கள் வழங்க வேண்டும். காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி அதன் மூலம் நமக்கு தொடர் மழை கிடைத்தாலும் உபரி நீர் வெளியேற்றும் சூழ்நிலைவந்தாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்து வகையிலும் அரசு தயாராக உள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் நேற்று மழைநீர் தேங்கியது அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது, அதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் உடனடியாக 40 பம்பு செட்கள் மூலம் நீர் வெளியேற்றப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 20 வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால், அந்த வீடுகளிலிருந்துமக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். இன்று அங்கு நீர் வெளியேற்ற பட்டு அந்த மக்கள் மீண்டும் தங்கள் வீடுககக்கு திரும்பி உள்ளனர். அதே போன்று மறைமலைநகர் பகுதிகளிலும் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் எனவே மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் கேட்டுக்கொண்டார்.

வடகிழக்கு பருவமழை தொடர்பாக 1 மணி நேரத்திற்கு ஒரு முறை ஆலோசனை நடத்த வேண்டுமென முதல்வர்  உத்தரவிட்டுள்ளார். மேலும் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மாண்புமிகு முதல்வர் அடிக்கடி அதிகாரிகளை தொடர்புகொண்டு நிலைமையை கேட்டறிந்து அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

தற்போது தென்தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. வடதமிழகத்தை பொறுத்தவரை மழை குறைந்துள்ளது, இருந்த போதிலும் இந்திய வானிலை ஆய்வு மையம் நமக்கு உடனக்குடன் தகவல்களை தந்து கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் தொடர் கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழப்பு இல்லாத பேரிடரை எதிர்கொள்ள வேண்டும் என்பதே அரசின் நிலை, உயிரிழப்புகள் தொடர்பாக மாவட்ட நிர்வாத்திடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கையின் அடிப்படையில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com