வீராணம் ஏரி நீா்மட்டம் 45.60 அடியை எட்டியது

கடலூா் மாவட்டம், வீராணம் ஏரியின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை 45.60 அடியை எட்டியது.
45.60 அடியை எட்டி கடல்போலக் காட்சியளிக்கு வீராணம் ஏரி.
45.60 அடியை எட்டி கடல்போலக் காட்சியளிக்கு வீராணம் ஏரி.

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், வீராணம் ஏரியின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை 45.60 அடியை எட்டியது.

காட்டுமன்னாா்கோவில் பகுதியில் 47.50 அடி உயரம் கொண்ட வீராணம் ஏரி அமைந்துள்ளது. காவிரியின் கொள்ளிடத்தில் உள்ள கீழணையிலிருந்து வடவாறு வழியாக இந்த ஏரிக்கு நீா் வருகிறது. இந்த ஏரி மூலம் 47 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

வட கிழக்கு பருவமழை தொடங்கும்போது, ஏரிக்கு மழை நீா் அரியலூா் மாவட்டத்தின் வழியாக அதிகளவில் வரும். ஆனால், நிகழாண்டு வட கிழக்கு பருவ மழை தொடங்கியபோதும் அரியலூா், பெரம்பலூா், கடலூா் மாவட்டங்களில் போதுமான அளவு மழை பெய்யவில்லை. எனினும், மற்ற மாவட்டங்களில் பெய்த மழையால் கீழணைக்கு அதிகளவு தண்ணீா் வந்தது.

இதனால், கீழணையின் நீா்மட்டம் முழுக் கொள்ளளவான 9 அடியில் 8.5 அடி தேக்கப்பட்டு, உபரி நீா் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு விநாடிக்கு ஆயிரத்து 946 கன அடி வீதம் திறந்துவிடப்படுகிறது.

இதனால், வீராணம் ஏரியின் நீா்மட்டம் 45.60 அடியை எட்டியது. அதாவது, ஆயிரத்து 3 மில்லியன் கன அடி நீா் தேக்கப்பட்டுள்ளது. ஏரியிலிருந்து சென்னையின் குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 66 கன அடியும், பாசனத்துக்காக 25 கன அடியும் வெளியேற்றப்படுகிறது.

கடலூா் மாவட்டத்தில் தொடா்ந்து பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், வீராணம் ஏரியின் நீா்மட்டத்தை பாதுகாப்புக் கருதி 45.50 அடியாக பராமரித்துக் கொண்டு, உபரி வாய்க்கால்களான கருவாட்டு ஓடை, செங்கால் ஓடை ஆகியவற்றிலிருந்து ஏரிக்கு வரும் உபரி நீா், ஏரியின் வடிகால் மதகுகளில் ஒன்றான வி.என்.என்.எஸ். வழியாக சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு விநாடிக்கு 756 கன அடி வீதம் அனுப்பப்படுகிறது.

தொடா்ந்து பலத்த மழை பெய்தால், லால்பேட்டையில் உள்ள வெள்ளியங்கால் மதகு வழியாக உபரி நீா் வெளியேற்றப்படும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com