இறந்துபோன கறவைமாட்டிற்கு இழப்பீடு: முதல்வருக்கு பெண் விவசாயி புகார் மனு 

இறந்துபோன கறவைமாட்டிற்கு இழப்பீடு தொகையை பெற்றுக்கொடுக்க கோரி பெண் விவசாயி முதல்வருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
பெண் விவசாயி.
பெண் விவசாயி.

வாழப்பாடி: வாழப்பாடி அருகே திடீரென இறந்து போன கறவைமாட்டிற்கு காப்பீடு செய்திருந்தும், இழப்பீடுத் தொகையை பெற்றுக்கொடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென, கால்நடை மருத்துவர்கள் மீது பெண் விவசாயி முதல்வருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் மேற்குராஜாபாளையம் ஊராட்சி குட்டக்கரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சின்னசாமி மனைவி சி.சந்திரா முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: கறவைமாடு வளர்த்து இதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு பிழைப்பு நடத்தி வந்தேன். எனக்கு சொந்தமான கறவைமாட்டிற்கு(பசு) கடந்த 2018ஆம் ஆண்டு, மேற்குராஜாபாளையம் கால்நடை கிளை நிலையத்தின் வாயிலாக, நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் காப்பீட்டு நிறுவனத்திற்கு கடந்த 2018 ஆகஸ்ட் 10ஆம் தேதி ரூ.1200 காப்பீட்டு தொகை செலுத்தி, ரூ.40 ஆயிரத்திற்கு காப்பீடு செய்துள்ளேன். 

இந்த காப்பீடு 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை பயன்பாட்டில் இருக்கிறது. இதற்கிடையே எனது கறவைப்பசு கடந்த மே மாதம் 10ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டது. இதுகுறித்து மேற்குராஜாபாளையம் கால்நடை மருத்துவர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை ஆத்துார் உதவி இயக்குநர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தேன். ஆனால், இறந்து போன கறவை மாட்டை பார்வையிடவும், உடற்கூறாய்வு செய்யவும், காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து உரிய இழப்பீட்டு தொகையை பெற்றுக் கொடுக்கவும் முன்வரவில்லை. பலமுறை அணுகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். இதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறேன்.

எனவே, இறந்து போன எனது கறவைமாட்டிற்கு காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து உரிய இழப்பீட்டு தொகையை கிடைப்பதற்கும், எனக்கு உரிய இழப்பீடு பெற்றுக்கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்துவரும் கால்நடை மருத்துவர் மற்றும் உதவி இயக்குநர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com