ஸ்டாலினை கிண்டல் செய்து சுவரொட்டி: திமுக பொறுப்பு குழு உறுப்பினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

ஸ்டாலினை விமர்சித்து சுவரொட்டி ஒட்டியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திமுக பொறுப்பு குழு உறுப்பினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
தீக்குளிக்க முயன்ற திமுக பொறுப்பு குழு உறுப்பினர் சித்ரகலா.
தீக்குளிக்க முயன்ற திமுக பொறுப்பு குழு உறுப்பினர் சித்ரகலா.



கோவை: கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை விமர்சித்து சுவரொட்டி ஒட்டியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திமுக பொறுப்பு குழு உறுப்பினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

திமுக தலைவர் மு.க ஸ்டாலினை விமர்சித்து கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டபட்டது.

திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்யும் விதமாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் பெயரில்லாமல் ஒட்டப்பட்டு இருந்தது. இந்த சுவரொட்டிகள் அதிமுகவினரால்  ஒட்டப்பட்டது எனவும் அதை கண்டித்தும் திமுக இளைரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கோவை நகரில் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், வியாழக்கிழமை மீண்டும் கோவை நகரில் பல்வேறு இடங்களில் திமுக தலைவர் ஸ்டாலினை  விமர்சிக்கும் விதமாகவும், கிண்டல் செய்யும் விதமாகவும் ரயில்நிலையம், லாலா கார்னர், டவுன்ஹால்  உள்பட பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது.

அந்த சுவரொட்டியில் ஊரடங்கில் அயராது உழைத்தவரா? என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படத்தையும், ஊரடங்கில்  விக் வைத்தவரா? என திமுக ஸ்டாலின் படத்தையும் போட்டு  கிண்டல் செய்யப்பட்டு இருந்தது.

மற்றொரு சுவரொட்டியில் விவசாயிகளுக்காக டெல்டாவை பாதுகாத்த முதல்வரா? மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களில் கையெழுத்திட்டவரா?  எனவும் விமர்சனம் செய்யபட்டு இருந்தது.

சுவரொட்டியை அடித்தவர் பெயர், அச்சடித்தவர் பெயர் எதுவும் குறிப்பிடாமல் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை திமுகவினர் கிழித்து எறிந்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சுவரொட்டி ஒட்டியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வந்த பூ மார்கெட் பகுதி பொறுப்பு குழு உறுப்பினர் சித்ரகலா தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனை கண்ட அங்கிருந்த பந்தய சாலை போக்குவரத்து காவலர் சதாசிவம் மற்றும் உளவுதுறை காவலர் கருப்புசாமி ஆகியோர் சித்ரகலாவிடம் இருந்து மண்ணெண்ணை கேனை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து சாலையில் அமர்ந்த சித்ரகலா திமுக தலைவரை கிண்டல் செய்யும் விதமாக சுவரொட்டி ஒட்டியவர்களை கைது செய்யாததை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

விரைவில் சுவரொட்டி ஒட்டியவர்களை கைது செய்யாவிட்டால் கட்சிக்காக மீண்டும் தீக்குளிப்பேன் எனவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த பந்தய சாலை போலீசார் சித்ரகலாவை பந்தய சாலை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

திமுக உறுப்பினர் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் காரணமாக மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com