மீட்கப்பட்ட சிலைகளை ஸ்ரீராஜகோபால பெருமாள் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்த முதல்வர்

மீட்கப்பட்ட சிலைகளை ஸ்ரீராஜகோபால பெருமாள் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்த தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, அதனை மீட்ட காவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.
மீட்கப்பட்ட சிலைகளை ஸ்ரீராஜகோபால பெருமாள் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்த முதல்வர்
மீட்கப்பட்ட சிலைகளை ஸ்ரீராஜகோபால பெருமாள் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்த முதல்வர்


மீட்கப்பட்ட சிலைகளை ஸ்ரீராஜகோபால பெருமாள் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்த தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, அதனை மீட்ட காவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (20.11.2020) முகாம் அலுவலகத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீராஜகோபால பெருமாள் திருக்கோயிலில் 1978-ஆம் ஆண்டு களவு போய், தமிழ்நாடு காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவால் மீட்கப்பட்ட புராதான சிலைகளான இராமர், சீதை மற்றும் இலட்சுமணன் சிலைகளை மீண்டும் ஸ்ரீராஜகோபால பெருமாள் கோயிலில் வைத்து வழிபடும் வகையில் அக்கோயிலின் செயல் அலுவலரிடம் ஒப்படைத்ததோடு, சிலைகளை மீட்ட தமிழ்நாடு காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்களுக்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், அனந்தமங்கலம் கிராமத்தில் விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீராஜகோபால பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இலங்கையில் யுத்தம் முடிந்து இராமர் அயோத்தி திரும்பும் வழியில் இராவண அரக்கர்களின் வாரிசுகளான இரக்கபிந்து மற்றும் இரக்தராட்சகன் ஆகியோரை அழிக்க அனுமனை பணித்ததால், அனுமனும் தேவர்கள் வழங்கிய பத்து விதமான ஆயுதங்களுடன் சென்று அரக்கர்களுடன் போரிட்டு, அவர்களை அழித்து, அயோத்தி திரும்பும் வழியில் அனந்தமங்கலத்தில் போரில் வென்ற ஆனந்தத்துடன் இத்திருக்கோயிலில் காட்சி அளித்ததாக புராணங்களில் கூறப்படுகிறது.

இக்கோயிலில் கடந்த 23.11.1978 அன்று இராமர், சீதை, இலட்சுமணர் மற்றும் அனுமர் சிலைகள் களவு போயின. தமிழ்நாடு காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் தீவிர முயற்சியால் இராமர், இலட்சுமணன் மற்றும் சீதை சிலைகள் இலண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, இச்சிலைகள் இலண்டனில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் புதுதில்லியில் உள்ள இந்திய தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

மீட்கப்பட்ட இப்புராதான சாமி சிலைகளை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று பார்வையிட்டு, இச்சிலைகளை ஸ்ரீராஜகோபால பெருமாள் கோயிலில் மீண்டும் வைத்து வழிபடும் வகையில், அக்கோயிலின் செயல் அலுவலரிடம் ஒப்படைத்தார்.

மேலும், 42 ஆண்டுகளுக்கு முன் களவு போன புராதான சாமி சிலைகளை கண்டெடுக்க கடும் முயற்சி மேற்கொண்டு, மீட்டெடுத்த தமிழ்நாடு காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்களை முதல்வர் பாராட்டினார்.

இந்த நிகழ்வின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். இராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் க. சண்முகம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com