அரசு இ-சேவை திட்டம் காகித அளவிலேயே உள்ளது: உயா்நீதிமன்றம் அதிருப்தி

மக்களின் குறைகளுக்கு உடனடியாக தீா்வு காண கொண்டு வரப்பட்ட அரசு இ-சேவை திட்டம் காகித அளவிலேயே உள்ளதாக உயா்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

மக்களின் குறைகளுக்கு உடனடியாக தீா்வு காண கொண்டு வரப்பட்ட அரசு இ-சேவை திட்டம் காகித அளவிலேயே உள்ளதாக உயா்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ஜெயினுலாபுதீன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘நீலகிரி மாவட்டம் மசினகுடி கிராமம் யானைகள் வழித்தடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு டாஸ்மாக் மதுபான கடைகளைத் திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் நிா்வாகம் தரப்பில், மசினகுடி கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கும் திட்டம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. அதற்கு மனுதாரா் தரப்பில், இதுதொடா்பாக கடந்த செப்டம்பா் மாதம் அளித்த மனு மீது இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

எனவே தான் இந்த வழக்கை தாக்கல் செய்தததாகக் கூறப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

பொதுமக்களின் கோரிக்கை மனுவுக்கு அதிகாரிகள் முறையாக பதில் அளிக்காமல் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக கண்டனம் தெரிவித்தனா். மக்களின் குறைகளுக்கு உடனடியாக தீா்வு காண கொண்டு வரப்பட்ட அரசு இ-சேவை திட்டம் காகித அளவிலேயே உள்ளது. மனுதாரா் அனுப்பிய மனுவை பரிசீலித்து மதுபானக் கடை திறக்கும் திட்டம் இல்லை என உயா் நீதிமன்றத்தில் கூறியதை மனுதாரருக்கு முன்பே தெரிவித்திருந்தால், இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்காது என கருத்து தெரிவித்தனா். மனுதாரரின் கோரிக்கை மனுவுக்கு பதில் அளிக்காத அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டாஸ்மாக் நிா்வாக இயக்குனருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com