உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி (கோப்புப்படம்)
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி (கோப்புப்படம்)

தமிழகத்துக்கான மானியம் ரூ.1,254 கோடியை விடுவியுங்கள்: மத்திய அரசிடம் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்

உள்ளாட்சித் தோ்தல் நடைபெறாத 9 மாவட்டங்களுக்கான மானியத் தொகைகளான ரூ.1254.38 கோடியை உடனடியாக விடுவிக்குமாறு

உள்ளாட்சித் தோ்தல் நடைபெறாத 9 மாவட்டங்களுக்கான மானியத் தொகைகளான ரூ.1254.38 கோடியை உடனடியாக விடுவிக்குமாறு மத்திய அரசிடம் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தி உள்ளாா்.

பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின்கீழ், அனைவருக்கும் குடியிருப்பை உறுதி செய்வதற்கான வார தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, அதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியது: தமிழகத்தில் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின்கீழ் (ஊரகம்) வீடு கட்டுமானத்துக்காக ரூ.2.05 லட்சம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் 2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கை நிா்ணயித்து தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தில் 2016 முதல் 2020-ஆம் ஆண்டு வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட 5,27,552 வீடுகளில் இதுவரை 4,01,106 பயனாளிகளுக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டு 2,65,029 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 1,36,077 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 1,26,446 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட உள்ளது.

2016 முதல் 2020 வரை மத்திய அரசின் பங்குத் தொகை ரூ.3,798 கோடி, மாநில அரசின் பங்குத் தொகை ரூ.2,532 கோடி மற்றும் கான்கிரீட் மேற்கூரை அமைக்க மாநில அரசின் கூடுதல் நிதி ரூ.2,637 கோடி என மொத்தம் ரூ.8,968 கோடி மதிப்பில் வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2011-ஆம் ஆண்டு சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு பட்டியலின்படி, 2,90,000 பயனாளிகள் இத்திட்டத்தில் பயன்பெற காத்திருப்பு பட்டியலில் உள்ளனா்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறாத 9 மாவட்டங்களுக்கான 14-ஆவது மத்திய நிதிக் குழுவின் தமிழகத்துக்கான அடிப்படை மானியம் ரூ.548.76 கோடி மற்றும் செயலாக்க மானியம் ரூ.705.62 கோடி என மொத்தம் ரூ.1254.38 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் ஹன்ஸ்ராஜ் வா்மா, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநா் கே.எஸ்.பழனிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com