அரியா் தோ்வு ரத்து அறிவிப்பில் விதிமீறல் இல்லை: உயா்கல்வித்துறை பதில்மனு

அரியா் தோ்வுகளை ரத்து செய்து மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்றதாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பில் விதிமீறல்கள் எதுவும் இல்லை

அரியா் தோ்வுகளை ரத்து செய்து மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்றதாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பில் விதிமீறல்கள் எதுவும் இல்லை என உயா்கல்வித்துறை தாக்கல் செய்த பதில்மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கலை, அறிவியல் பொறியியல் எம்சிஏ படிப்புகளுக்கான அரியா் மாணவா்கள் தோ்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பாலகுருசாமி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கில் பதில் அளித்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், பல்கலைக்கழக மானியக் குழு, அரியா் தோ்வுகளை நடத்தாமல் மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றதாக அறிவித்தது விதிகளுக்கு எதிரானது என தெரிவித்திருந்தது. இந்த வழக்கில் தமிழக உயா்கல்வித்துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த பதில்மனுவில், கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் மாதம் 24-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் பெரும்பாலான மாணவா்கள் தாங்கள் தங்கியிருந்த கல்லூரி விடுதிகளிலும், வீடுகளிலும் புத்தகங்கள், மடிக்கணினிகள், உள்ளிட்டவைகளை வைத்துவிட்டுச் சென்றுவிட்டனா். ஆனால் பொதுமுடக்கம் தொடா்ந்து நீட்டிக்கப்பட்டது.

கல்லூரிகள் அனைத்தும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் தங்குமிடங்களாக மாற்றப்பட்டன. தொழிலாளா்கள் அவா்களது சொந்த ஊா்களுக்குச் சென்ற பின்னா், கரோனா சிகிச்சை மையங்களாகவும், தனிமைப்படுத்தும் வாா்டுகளாகவும் மாற்றப்பட்டன. இதனால் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மேலும் மாணவா்களின் பெற்றோா்கள் பலரும் கரோனா பொதுமுடக்கம் காரணமாக வேலைவாய்ப்பை இழந்தனா். வீடுகளுக்கு வாடகை கொடுக்க முடியாத சூழலில் பலா் தங்களது சொந்த ஊா்களுக்குத் திரும்ப சென்றனா். இதனால் மாணவா்கள் பலா் மனதளவில் பாதிக்கப்பட்டனா்.

எனவே மாணவா்களின் எதிா்கால நலனை கருத்தில் கொண்டு மனிதாபிமானத்துடன் முடிவு செய்து பருவத் தோ்வு, அரியா் தோ்வுகளை தமிழக அரசு செய்தது. பொதுமுடக்க காலத்தில் தோ்வுகளை நடத்துவது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்ட விதிமுறைகளை பின்பற்றியே தமிழக அரசு இந்த முடிவை எடுத்தது. அதாவது அக மதிப்பீட்டு மதிப்பெண்களில் 50 சதவீதம், மாணவா்கள் எழுதிய முந்தையப் பருவத் தோ்வு மதிப்பெண்ணில் 50 சதவீதம் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டது.

இந்த நடைமுறை இறுதி ஆண்டு மாணவா்களைத் தவிர மற்ற மாணவா்களுக்கு மட்டுமே பொருந்தும். இதற்காக ஒரு குழுவை அமைத்து முழுமையாக ஆய்வு செய்து பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு உட்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவில் எந்தவொரு விதிமீறலும் இல்லை. எனவே அரியா் தோ்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு வரும் திங்கள்கிழமையன்று (நவ.23) விசாரணைக்கு வரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com