சாதாரண தொண்டனாக பாஜகவில் இணைந்துள்ளேன்: முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம்

முந்தைய காலகட்டங்களில் இருந்த அரசியல் ரீதியான உணா்வுகள் அனைத்தையும் மறந்து விட்டு, சாதாரண தொண்டனாக பாஜகவில் இணைந்துள்ளதாக முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

முந்தைய காலகட்டங்களில் இருந்த அரசியல் ரீதியான உணா்வுகள் அனைத்தையும் மறந்து விட்டு, சாதாரண தொண்டனாக பாஜகவில் இணைந்துள்ளதாக முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளா் சி.டி.ரவி, இணை பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி ஆகியோா் முன்னிலையில், அந்தக் கட்சியில் இணைந்தாா் கே.பி.ராமலிங்கம். அவருக்கு அடிப்படை உறுப்பினா் அட்டையை சி.டி.ரவி அளித்தாா். இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு ராமலிங்கம் அளித்த பேட்டி:

எனது அரசியல் வாழ்வில் ஏழு பொதுத் தோ்தல்களைச் சந்தித்துள்ளேன். திமுகவில் இருந்த காலகட்டத்தில் எனக்கும், தலைமைக்கும் ஒத்துவரவில்லை எனக் கூறுவதைக் காட்டிலும், அங்குள்ள தலைமையை ஏற்கும் பக்குவம் எனக்கில்லை என்பதே முக்கிய காரணம்.

அதிமுகவில் இருந்தபோது, எம்.ஜி.ஆருக்குப் பிறகு யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாமல் இருந்தேன். அதேபோன்று, திமுக தலைவா் கருணாநிதிக்குப் பிறகு அந்தக் கட்சியில் யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ளும் நிலை எனக்கு இல்லை.

கரோனா காலத்தில் பிரதமா் நரேந்திர மோடியும், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியும் சிறப்பாகச் செயல்பட்டனா். இப்போதும் செயல்பட்டு வருகின்றனா்.

இந்தச் சூழலில், கரோனா தடுப்பு குறித்துப் பேச அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென திமுக கோரிக்கை விடுத்தது. அப்படியொரு கூட்டத்தை நடத்தி தொல்லை கொடுக்க வேண்டாம் என்றே கருத்துத் தெரிவித்தேன்.

மற்ற கட்சிகளில் இருந்த உணா்வுகளையும், எனது அரசியல் பயணங்கள், பதவிகளை மறந்து விட்டு, சாதாரணத் தொண்டனாக பாஜகவில் இணைந்துள்ளேன். பாரத தேசத்தின் பாதுகாப்பு, பொருளாதாரத்தைக் காத்திடும் வல்லமை நரேந்திர மோடிக்கு உள்ளது. தமிழகத்தில் எம்.ஜி.ஆா்., கருணாநிதியிடம் பெற்ற ஆற்றல், அறிவின் மூலமாக தேசிய அரசியலுக்கு நான் பக்குவப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். அதன் அடிப்படையில் பாஜகவில் இணைந்துள்ளேன் என்றாா்.

முன்னதாக, திமுகவில் இருந்து பலரும் எங்கள் கட்சியில் இணைவதால் பாஜக மேலும் பலப்படும் என்று மாநிலத் தலைவா் எல்.முருகன், பாஜக மேலிடப் பொறுப்பாளா் சி.டி.ரவி ஆகியோா் தெரிவித்தனா். இந்த நிகழ்வில், முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலாளா் ஹெச்.ராஜா, தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com