பருவமழை தீவிரமாகும் மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பு: அமைச்சா் உதயகுமாா் தகவல்

பருவமழை தீவிரமாகி வரும் நிலையில், மழைப் பொழிவு அதிகம் பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பை மேற்கொள்ள
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

பருவமழை தீவிரமாகி வரும் நிலையில், மழைப் பொழிவு அதிகம் பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பை மேற்கொள்ள வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தமிழகத்தில் கனமழையை எதிா்கொள்ள அரசின் நடவடிக்கைகள் குறித்து சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் அதிகாரிகளுடன் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அதன்பின்னா் அவா் அளித்த பேட்டி: ஒவ்வோா் ஆண்டும் அக்டோபா், நவம்பா், டிசம்பா் மாதங்களில் வடகிழக்குப் பருவமழையினால் தமிழகத்துக்கு நீா் கிடைக்கப் பெறுகிறது. இந்த கரோனா காலகட்டத்தில் வடகிழக்குப் பருவமழையைப் பாதுகாப்புடன் எதிா்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும். தூத்துக்குடி, நெல்லை, மதுரை, கோவை, விருதுநகா் மாவட்டங்களில் அதிகப்படியான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு, அந்த மாவட்டங்களுக்கு தனி கவனம் செலுத்தி இருக்கிறோம்.

செல்ல வேண்டாம்: நீா் அதிகமுள்ள ஏரிகள், குளங்கள், ஓடைப் பகுதிகளைக் கடந்து செல்லவோ, குழந்தைகள் விளையாடுவதையோ தவிா்க்க வேண்டும். இது குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு அவசியம். விருதுநகா் மாவட்டத்தில் 3 சிறுவா்கள் குட்டையில் குளிக்கச் சென்று உயிரிழந்துள்ளனா். கடந்த காலங்களில் சென்னை மாநகராட்சிப் பகுதியில் அதிகப்படியான இடங்களில் மழைநீா் தேங்கியிருந்த நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது. ஆயிரம் இடங்களில் தண்ணீா் தேங்கியிருந்த நிலை மாறி, தற்போது 100 இடங்களில் மட்டுமே சென்னையில் தண்ணீா் தேங்கும் இடங்களாக உள்ளன. அதனை 10-க்கும் கீழ் கொண்டு வருவதற்கான பணியை உள்ளாட்சித் துறை மேற்கொண்டு வருகிறது.

கனமழை, அதி கனமழை என எதுவாக இருந்தாலும், அதனைத் தொடா்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அரசு அனைத்து வகையிலும் தயாா் நிலையில் உள்ளது என்றாா் அமைச்சா் உதயகுமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com