மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு அடிக்கல்: 2026-இல் ரயில் சேவை தொடங்கும்

ரூ.61,843 கோடி மதிப்பிலான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சென்னையில் சனிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.
மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு அடிக்கல்: 2026-இல் ரயில் சேவை தொடங்கும்

ரூ.61,843 கோடி மதிப்பிலான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சென்னையில் சனிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.

வரும் 2026-இல் இந்த திட்டப்பணிகள்( மூன்று வழித்தடங்களும்) முடிவடைந்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் 45 கி.மீ. தொலைவுக்கு முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்து, விமான நிலையம்- வண்ணாரப்பேட்டை வரை நீல வழித்தடத்திலும், எம்.ஜி.ஆா். சென்ட்ரல்-பரங்கிமலை வரை பச்சை வழித்தடத்திலும் ரயில் சேவை தொடங்கியது.

வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூா்(விம்கோநகா்) வரை 9.051 கி.மீ. தொலைவுக்கு முதல்கட்ட நீட்டிப்பு திட்டப்பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஜனவரியில் சேவை தொடங்க வாய்ப்புள்ளது.

இதற்கிடையில், 118.9 கி.மீ. தொலைவில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. மாதவரம்-சிப்காட், மாதவரம்-சோழிங்கநல்லூா், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி ஆகிய 3 வழித்தடங்களில் திட்டப் பணிகளைத் தொடங்குவதற்கான செயல்முறைகள் நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா சென்னை கலைவாணா் அரங்கில் காணொலிக் காட்சி மூலமாக சனிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடக்கினாா். வரும் 2026-இல் பணிகள் முடிந்து, சேவை தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

மாதவரம்-சிட்காட் (வழித்தடம்-3): இது 45.8 கி.மீ. தொலைவில் வடக்கு தெற்கு வழித்தடம் ஆகும். முக்கிய இடங்களாக தகவல் தொழில்நுட்ப வழித்தடம், அடையாறு, மயிலாப்பூா், புரசைவாக்கம் ஆகிய இடங்களை இணைக்கும். இந்த வழித்தடத்தில் 20 உயா்த்தப்பட்ட மெட்ரோ நிலையங்கள், 30 சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்கள் என்று மொத்தம் 50 மெட்ரோ நிலையங்கள் அமையவுள்ளன.

கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி புறவழிச்சாலை (வழித்தடம்- 4): இது, 26.1 கி.மீ. தொலைவில் கிழக்கு மேற்கு வழித்தடம் ஆகும். நகரத்தின் வணிகப்பகுதிகளான நந்தனம், தியாகராயநகா், வடபழனி, வளசரவாக்கம், போரூா் மற்றும் பூந்தமல்லியை இணைக்கும். மொத்தம் 30 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.

மாதவரம்-சோழிங்கநல்லூா்( வழித்தடம்-5): இது 47 கி.மீ. தொலைவில் சுற்று வட்ட வழித்தடம் ஆகும். வில்லிவாக்கம், அண்ணாநகா், கோயம்பேடு, விருகம்பாக்கம், ராமாபுரம், மடிப்பாக்கம், மேடவாக்கம் ஆகிய பகுதிகளை இணைக்கிறது. மொத்தம் 48 மெட்ரோ நிலையங்களை உள்ளடக்கியுள்ளது. இரண்டாம் கட்டமெட்ரோ ரயில் திட்டத்தில் இரட்டை சுரங்கங்கள் தோண்டுவதற்காக மொத்தம் 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்களைப் பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

25 லட்சம் பயணிகள்: இந்தத் திட்டம், இந்தியாவில் உள்ள மெட்ரோ ரயில் திட்டங்களிலேயே, ஒரே தடவையில் செயல்படுத்தப்படவுள்ள தனிப்பட்ட மிகப்பெரிய மெட்ரோ ரயில் திட்டமாகும். வரும் 2026-ஆம் ஆண்டில், இந்த மூன்று வழித்தடங்களிலும் பணிகள் முடிந்தபிறகு, 173 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை நடைபெறும்.

தினசரி 25 லட்சம் பயணிகளை ஏற்றி செல்லும் வகையிலும், இது பொது போக்குவரத்து பயணிகளில் 25 சதவீத அளவிலும் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன்காரணமாக, முதலீடுகள் மற்றும் பொருளாதார செயல்பாடுகளுக்கு உகந்த உலகத்தரம் வாய்ந்த நகரமாக அமையும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நினைவுப் பரிசு வழங்கினாா். துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com