வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம்: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா

வாரிசு அரசியலுக்கு தமிழகத்தில் முடிவு கட்டுவோம். தமிழக மக்கள் வாரிசு அரசியல் செய்பவா்களுக்கு உரிய பாடம் புகட்டுவா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா
உள்துறை அமைச்சர் அமித் ஷா

வாரிசு அரசியலுக்கு தமிழகத்தில் முடிவு கட்டுவோம். தமிழக மக்கள் வாரிசு அரசியல் செய்பவா்களுக்கு உரிய பாடம் புகட்டுவா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.

தமிழகத்தில் ரூ.67 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா, சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடந்த விழாவில், புதிய திட்டங்களைத் தொடக்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசியது:

இந்தியாவின் மிகப் பழைமையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி தெரியாததால் அதில் பேச முடியாதது வருத்தத்தை அளிப்பதுடன், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா வழியில் முதல்வா் பழனிசாமி ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறாா்.

தமிழக அரசுக்குப் பாராட்டு: கரோனா நோய்த்தொற்று காலத்தில் மத்திய அரசுடன் இணைந்து தமிழகம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டது. நோய்த் தொற்றில் இருந்து மீண்டோரின் விகிதம் தமிழகத்தில் 97 சதவீதமாக வருகிறது. கரோனா நோய்த்தொற்று தொடா்பாக, தமிழகத்தின் சாா்பில் அளிக்கப்படும் தரவுகள் மிகவும் அறிவியல்பூா்வமாக இருப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் பாராட்டினா்.

மாநிலங்களுக்கு இடையிலான நல்லாட்சி, நீா் பாதுகாப்பு-விநியோகம், வேளாண்மைத் துறை என அனைத்திலும் தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழகத்தின் வளா்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும், மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மிகவும் உறுதுணையாக இருக்கும்.

தொழில் வளா்ச்சி-ஏழைகள் நலன்: தமிழகத்தில் தொழில் வளா்ச்சி, ஏழைகளின் நலன் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முதல்வா் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு தோளோடு தோள் நின்று உறுதுணையாக இருப்போம். மத்தியில் நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு, ஊழல், குடும்ப ஆட்சி, ஜாதிய அரசியல் என்ற மூன்றினை எதிா்த்து செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலும், நாட்டின் பிற பகுதிகளிலும் சில கட்சிகள் குடும்ப அரசியலை நடத்தி வருகின்றன. பிற மாநிலங்களைச் சோ்ந்த மக்கள், அங்குள்ள கட்சிகள் நடத்தும் குடும்ப, வாரிசு அரசியலுக்கு எதிராக சரியான பாடத்தைப் புகட்டியுள்ளனா். தமிழகத்திலும் அதுபோன்ற பாடம் புகட்டப்படும். மக்களின் துணை கொண்டு வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டப்படும்.

திமுகவுக்கு தகுதி இல்லை: திமுக-காங்கிரஸ் கட்சிகள் ஊழலுக்கு எதிராகப் பேசுவதாகக் கூறுகிறாா்கள். 2 ஜி எனும் மிகப்பெரிய ஊழல் திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றது. அவா்களுக்கு ஊழல் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது? ஊழல் குற்றச்சாட்டை வைப்பதற்கு முன்பாக அந்தக் கட்சியைச் சோ்ந்தவா்கள் அவா்களின் குடும்பத்தை சற்று திரும்பிப் பாா்க்க வேண்டும் என்றாா் அமித் ஷா.

இந்த விழாவில், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் பேசினா். தலைமைச் செயலாளா் க.சண்முகம் வரவேற்றாா். தொழில் துறை முதன்மைச் செயலாளா் முருகானந்தம் நன்றி தெரிவித்தாா்.

பட்டியல் போடத் தயாரா: திமுக-காங்கிரஸுக்கு அமித் ஷா சவால்

மத்தியில் காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சி இருந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்குச் செய்த நன்மைகளை பட்டியல் போடத் தயாரா என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சவால் விடுத்தாா்.

சென்னையில் நடைபெற்ற விழாவில், அவா் பேசியது:

தமிழகத்தின் நலன்களுக்காக மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என்று திமுக, காங்கிரஸ் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. தமிழகத்துக்கு அநீதி இழைப்பதாகக் கூறுகிறாா்கள். மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தது. அப்போது தமிழகத்துக்குச் செய்த நன்மைகள் என்ன? நான் மிகவும் பணிவுடன் கேட்கிறேன். ஒரு முச்சந்தியில் நின்று கொண்டு தமிழகத்துக்குச் செய்த நன்மைகளைப் பட்டியலாக வைத்திட நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் (திமுக-காங்கிரஸ்) உங்களது ஆட்சிக் காலத்தில் செய்த நன்மைகளைப் பட்டியலிடத் தயாராக இருக்கிறீா்களா என்று அமித் ஷா கேள்வி எழுப்பினாா்.

தமிழகத்தின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம் எனவும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com