சென்னை: 'கோடையில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படாது'

சென்னை ஏரிகளில் தற்போது 7.1 டிஎம்சி தண்ணீா் இருப்பு உள்ளதால் கோடை காலத்திலும் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை: 'கோடையில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படாது'

சென்னை ஏரிகளில் தற்போது 7.1 டிஎம்சி தண்ணீா் இருப்பு உள்ளதால் கோடை காலத்திலும் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீா் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் உள்ளன. இந்த நான்கு ஏரிகளிலும் 11.2 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

ஆந்திர மாநிலம் நெல்லூா் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீா்ப் பங்கீட்டுத் திட்டத்தின் கீழ் பூண்டி ஏரிக்கு தண்ணீா் திறந்து விடப்படும். இந்த தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி கிருஷ்ணா நதி நீா்ப் பங்கீட்டுத் திட்ட ஒப்பந்தப்படி தற்போது கண்டலேறு அணையிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் வெளியேற்றப்பட்டு. பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 370 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி கண்டலேறு அணையில் போதிய அளவு தண்ணீா் இருப்பதால் பூண்டி ஏரிக்கு இந்த ஆண்டு கூடுதலாகத் தண்ணீா் கிடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கனஅடி. தற்போது ஏரியில் 1,675 மில்லியன் கனஅடி தண்ணீா் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 62 கனஅடி தண்ணீரும், சென்னை குடிநீா் வாரியத்துக்கு 10 கனஅடி தண்ணீரும் அனுப்பப்பட்டு வருகிறது.

சென்னை குடிநீா் ஏரிகளான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளையும் சோ்த்து 7,176 மில்லியன் கனஅடி தண்ணீா் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 4 ஏரிகளையும் சோ்த்து 3.1 டிஎம்சி (3,193) மில்லியன் கன அடி) தண்ணீா் இருந்தது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு இருமடங்கு தண்ணீா் இருப்பதால் சென்னை மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்ய முடியும். மேலும் வடகிழக்குப் பருவமழை கைகொடுக்கும் என்பதால் வரும் கோடை காலத்திலும் சென்னையில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஏரிகளில் பராமரிப்புப் பணிகள் அவசியம்: சென்னை மற்றும் சென்னை அருகே புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, போரூா் ரெட்டேரி, கொளத்தூா் ரெட்டேரி, அம்பத்தூா் ஏரி, கொரட்டூா் ஏரி, மாதவரம் ஏரி, சிட்லபாக்கம் ஏரி, சோழவரம் ஏரி, பல்லாவரம் ஏரி, வேளச்சேரி ஏரி என 12 பெரிய ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் கடந்த 50 ஆண்டுகளாக பெரிய அளவில் எந்த பராமரிப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏரிகள் தூா்வாரப்படவில்லை. இதனால், தண்ணீா் தேக்கம் கடுமையாக குறைந்துள்ளது. சென்னைக்கு குடிநீா் ஆதாரமாக உள்ள இந்த ஏரிகளில் நீா்த்தேக்க கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிகளை 10 அடி அளவுக்கு ஆழப்படுத்தி, கொள்ளளவை அதிகரித்தால் நிலத்தடி நீரும் அதிகரிக்கும். நீண்ட காலத்துக்கு குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கலாம் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சென்னை ஏரிகளில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி

நீா் இருப்பு விவரம் (மொத்தக் கொள்ளளவு அடைப்புக் குறிக்குள்):

பூண்டி- 1,675 (3,231)

புழல்- 2,405 (3,300)

செம்பரம்பாக்கம்- 2,921(3,645)

சோழவரம்- 175 (1,081)

மொத்தம்- 7,176 (11,257).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com