செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: 21 இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருவதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 21 இடங்களுக்கு புதன்கிழமை முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரத்தில் உள்ள வெள்ள ஒழுங்கி மூலமாக வெளியேற்றப்படும் உபரிநீர்
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரத்தில் உள்ள வெள்ள ஒழுங்கி மூலமாக வெளியேற்றப்படும் உபரிநீர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகேயுள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருவதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 21 இடங்களுக்கு புதன்கிழமை முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நிவர் புயல் மற்றும் கனமழை காரணமாக காஞ்சிபுரம் அருகே குன்றத்தூர் பகுதியில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. வெள்ளநீரின் வரத்துக்கேற்ப உபரிநீரானது படிப்படியாக வெளியேற்றப்படுவதால் அடையாறு ஆற்றின் வலது, இடது கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருப்பதன் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நந்திவரம், மண்ணிவாக்கம், மணிமங்கலம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களில் உள்ள வெள்ள ஒழுங்கிகள் மூலமாகவும் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறையின் கீழ்பாலாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கனமழை மற்றும் நிவர் புயல் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், முடிச்சூர், பெருங்களத்தூர், மேற்கு தாம்பரம், திருநீர்மலை, பொழிச்சலூர், அனகாபுத்தூர், பம்மல், சென்னை விமான நிலையம், கவுல்பஜார் மற்றும் அடையாறு ஆற்றின் வலது கரையோர பகுதிகள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எருமையூர், கரசங்கால், ஆதனூர், திருமுடிவாக்கம், மணிமங்கலம், வரதராஜபுரம், கோளப்பாக்கம், நரப்பாக்கம் மற்றும் அடையாறு ஆற்றின் இடது கரையை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது.

எனவே, இப்பகுதிகளுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நிரம்பியுள்ள ஏரிகள் விபரம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 909 ஏரிகளில் 167 ஏரிகள் 100 சதவிகிதமும், 290 ஏரிகள் 75 சதவிகிதமும், 219 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியிருக்கின்றன.

சென்னையில் உள்ள 16 ஏரிகளில் 2 ஏரிகள் 100 சதவிகிதமும், 4 ஏரிகள் 75 சதவிகிதமும், 5 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியிருக்கிறது.

மழையளவு

காஞ்சிபுரம் மாவட்டம்:

ஸ்ரீபெரும்புதூர்: 65.60, உத்தரமேரூர்: 37.20, வாலாஜாபாத்: 18.60, காஞ்சிபுரம்: 21.40, குன்றத்தூர்: 89.50, செம்பரம்பாக்கம்: 101.20, மொத்த மழையளவு: 333.70, சராசரி மழையளவு: 55.62

செங்கல்பட்டு மாவட்டம்:

திருப்போரூர்: 16.80, செங்கல்பட்டு: 25, திருக்கழுக்குன்றம்: 12.40, மகாபலிபுரம்: 16, மதுராந்தகம்: 16, செய்யூர்:9, தாம்பரம்:39, மொத்த மழையளவு: 134.80, சராசரி மழையளவு: 19.26.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com