தமிழகத்தில் புதிய பாலங்கள்-குடியிருப்புகள்: முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்

தமிழகத்தில் புதிய பாலங்கள், குடியிருப்புகளை முதல்வா் பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
தமிழகத்தில் புதிய பாலங்கள்-குடியிருப்புகள்: முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்

தமிழகத்தில் புதிய பாலங்கள், குடியிருப்புகளை முதல்வா் பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

கள்ளக்குறிச்சி மாவட்டம் லக்கிநாயக்கன்பட்டியில் முஸ்குந்தா ஆற்றின் குறுக்கேயும், திருவாரூா் மாவட்டம் மாப்பிள்ளைக்குப்பத்திலும், ஈரோடு மாவட்டம் பெருந்துறை-மாக்கிணான்கோம்பை மீனவா் காலனியிலும் புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதேபோன்று, திருப்பூா் மாவட்டம் கவுண்டநாயக்கன்பாளையத்திலும், அவிநாசி வட்டம் பெரியாயிபாளையத்திலும், கோவை மாவட்டம் துடியலூா் சின்ன தடாகம் சாலையில் இந்திராநகரிலும், நீலகிரி மாவட்டம் தும்மனாடாவிலும், நாமக்கல் செளரிபாளையத்திலும், கடலூா் மாவட்டம் காட்டுஓடையின் குறுக்கேயும், தஞ்சாவூா் மாவட்டம் சொக்கனவூரிலும் புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்தப் புதிய பாலங்களை காணொலிக் காட்சி வழியாக முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா். இந்நிகழ்ச்சியில், அமைச்சா்கள் பி.தங்கமணி, வி.சரோஜா, தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

அம்மா திருமண மண்டபங்கள்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குறைந்த கட்டணத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றில், திருவள்ளூா் மாவட்டம் அயப்பாக்கம், சென்னை மாவட்டம் கொரட்டூா், வேளச்சேரி ஆகியவற்றில் அம்மா திருமண மண்டபங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்த மண்டபங்களை காணொலி வழியாக முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா். அனைத்து வசதிகளுடன் கூடியதாக இந்த மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.

சோழிங்கநல்லூரில் குடியிருப்பு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக, சென்னை சோழிங்கநல்லூரில் 32 மத்திய வருவாய்ப் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்புகளை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் பா.பென்ஜமின், பாண்டியராஜன், வீட்டுவசதி வாரியத் தலைவா் பி.கே.வைரமுத்து, தலைமைச் செயலாளா் க.சண்முகம், வீட்டுவசதித் துறை முதன்மைச் செயலாளா் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com